வங்கிக்கடன், இ.எம்.ஐ.க்கு மீண்டும் சலுகையா?; காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்

டெல்லி: இந்தியா உட்பட உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி, பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல நாடுகளில் இது சமூக பரவலாக மாறியதால் உயிர் பலியும், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் அபாயகரமாக அதிகரித்து  வருகிறது. இந்தியாவில் கொரோனா பரவுதலை தடுக்க, முதலில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி வரை 21 நாட்களுக்கு மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. தொழில்துறைகள், நிறுவனங்கள் மூடிக் கிடக்கின்றன. அன்றாட கூலி வேலை  செய்பவர்கள் நிலை மிகவும் பரிதாபமாகி விட்டது.

தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த சூழ்நிலையில், ரூ.1.7 லட்சம் கோடி மதிப்பிலான நிவாரண உதவி திட்டங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆனால், நடுத்தர மக்கள் மிகவும் எதிர்பார்த்த மாதாந்திர  கடன் தவணை (இஎம்ஐ) தொடர்பான அறிவிப்புகள் எதுவும் இடம் பெறாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கடன் தவணைகளை தாமதமாக செலுத்த சலுகைகள் வழங்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தன.

தொடர்ந்து கடந்த 27-ம் தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ், பல்வேறு சலுகைகளை அறிவித்தார். அதில், பொதுமக்கள் வாங்கியுள்ள விவசாயம், வீடு மற்றும் வாகன  கடன்களுக்கான 3 மாத தவணைகளை வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூலிக்க வேண்டாம். அதோடு, வட்டி குறைப்பு உட்பட பல்வேறு சலுகை அறிவித்தார். இருப்பினும், இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தினால், கடந்த 14-ம்  தேதி நாட்டு மக்களுடன் உரையாற்றிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் ஊரடங்கை வரும் மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் இன்று காலை 10 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். இப்போது, சில முக்கிய சலுகைகள் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. வங்கிக்கடன், இ.எம்.ஐ.க்கு சலுகை  உள்ளிட்டவற்றை கடந்த முறை சக்தி காந்த் தாஸ் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: