பசிக்கொடுமையால் மயானத்தில் வீசப்பட்ட அழுகிய வாழைப்பழங்களை சாப்பிட்ட வெளிமாநில தொழிலாளர்கள்

புதுடெல்லி: டெல்லியில் மயானப் பகுதியில் வீசப்பட்ட வாழைப்பழங்களை வெளிமாநில தொழிலாளர்கள் எடுத்து சாப்பிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சிக்கியுள்ளனர். அவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாததால் தவித்து வருகிறார்கள். இவர்களில் பலர் அரசு தங்க வைத்த இடங்களில் தங்கி உள்ளனர். பலர் சொந்த ஊருக்கு செல்ல வழிதேடி யமுனை ஆற்றங்கரை பகுதியில் தங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களுக்கு போதுமான உணவு கிடைக்கவில்லை. யமுனை ஆற்றங்கரையில் நிகாம்போத் மயானம் உள்ளது. இது டெல்லியில் உள்ள மிகப்பெரிய மயானம் ஆகும்.

இந்த மயான பகுதியில் நேற்று மதியம் வாழைப்பழக் குவியல் கொண்டு வந்து கொட்டப்பட்டது. இதைப்பார்த்துக்கொண்டு இருந்த தொழிலாளர்கள் அனைவரும் ஓடி வந்து அந்த பழங்களை எடுத்து உண்ண ஆரம்பித்து விட்டனர். விற்பனை ஆகாததால் அழுகும் நிலையில் இருந்த பழங்களை கடை உரிமையாளர்கள் அங்கு கொட்டிவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இருப்பினும் அதை உணவாக தொழிலாளர்கள் எடுத்துக்கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர்கள் அனைவரும் கடும் பசியில் இருந்தது தெரிய வந்தது.

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார்க் பகுதியை சேர்ந்த ஒருவர் தனது கைப்பை முழுவதும் அந்த பழங்களை எடுத்துக்கொண்டார். இதுபற்றி அவர் கூறுகையில் இந்த பழங்கள் அவ்வளவு எளிதாக அழுகாது. எனவே இதை இன்னும் சில நாட்கள் உணவாக பயன்படுத்தலாம் என்றார்.  பரேலி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ்குமார் என்பவர் கூறுகையில் இரண்டு நாட்களுக்கு பின் இன்றுதான் எனக்கு  உணவு கிடைத்தது என்றார். இதனால் டெல்லியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது வெட்டவெளிச்சமாக தெரிய வந்துள்ளது.

Related Stories: