தமிழகம் முழுவதும் கொரோனா சோதனைக்கு பயிற்சியின்றி களமிறக்கப்படும் லேப் டெக்னீசியன்கள்: உரிய உபகரணங்களும் இல்லாததால் திண்டாட்டம்

நெல்லை:   தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு லேப் டெக்னீசியன்கள் கிரேடு 3 ஊழியர்களை உரிய பயிற்சிகள் இன்றி பொது சுகாதார துறையினர் களமிறக்கி வருவதால், அவர்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர். லேப் டெக்னீசியன்களுக்கு உரிய உபகரணங்களும் இல்லாத சூழலில், அவர்கள் கொரோனா சோதனையில் முழுமையாக ஈடுபடுவது கேள்விக்குறியாகி வருகிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பரவல், இந்தியாவிலும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. பாதித்தவர்களின் உறவினர்கள், அண்டை வீட்டார் மற்றும் தெருக்களில் உள்ளவர்கள் என கொரோனா பாதிப்பு குறித்து பொதுசுகாதார துறை சார்பில் மென்மேலும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கொரோனா பாதித்தவர்களுக்கு தொண்டை, மூக்கில் சளி மற்றும் டெஸ்ட் டியூப்பில் ரத்தம் பெறப்பட்டு, சோதனைகள் மேற்கொள்ளப்படும். இவற்றில் நோய் பாதிப்பு தெரிந்தால் கொரோனா நோயாளியாக சம்பந்தப்பட்டவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்வர். இப்பணிகளில் காது, மூக்கு, தொண்டைக்கான மருத்துவர், மைக்ரோ பயாலஜிஸ்ட், லேப் டெக்னீசியன்கள் மற்றும் உதவியாளர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.

கொரோனா பரிசோதனையில் டாக்டர்கள் மற்றும் மைக்ரோ பயாலஜிஸ்ட்டுகளை பயன்படுத்திட மத்திய அரசு உத்தரவிட்டுள்ள சூழலில், தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் லேப் டெக்னீசியன்கள் அதிகளவில் களமிறக்கப்படுகின்றனர். அதிலும் அனுபவமிக்க லேப் டெக்னீசியன்கள் கிரேடு 1 மற்றும் கிரேடு 2 ஆகியோரை அதிகளவில் பயன்படுத்துவதை தவிர்த்து, பணியின் ஆரம்பக்கட்டத்தில் உள்ள கிரேடு3 லேப் டெக்னீசியன்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய லேப் டெக்னீசியன்களை ஏதாவது ஒரு இடத்திற்கு அழைத்து 3 நாட்கள் பயிற்சி அளித்துவிட்டு நேரடியாக பரிசோதனைக்கு அழைத்து சென்று விடுகின்றனர். போதிய பயிற்சியற்ற அவர்கள் தங்களுக்கு தெரிந்த வரைக்கும் பரிசோதனை மேற்கொள்கின்றனர். மேலும் இதில் பலருக்கு கையுறையும் வழங்குவது இல்லை. நீங்களே வீட்டில் இருந்து கொண்டு வாருங்கள் என அதிகாரிகள் கேட்டுக் கொள்கின்றனர். சளி எடுக்க வருவோருக்கு வழங்க வேண்டிய பிபிஐ கிட்டுகளும் வழங்கப்படுவதில்லை.

கொரோனா முடிவுகளில் சில பரிசோதனைகள் முன்னுக்கு பின் முரணாக காட்சியளிப்பதில், பயிற்சியற்ற லேப் டெக்னீசியன்களுக்கு பங்கிருப்பதாக கூறப்படுகிறது. இதே பணிகளை மாநகராட்சி பகுதிகளில் புதிதாக ரூ.8500 ஊதியத்திற்கு எடுக்கப்பட்ட லேப் டெக்னீசியன்கள் தலையில் திணிப்பதாக கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் கிரேடு

3 லேப் டெக்னீசியன்கள் பணியில் சுமார் 3 ஆயிரம் பேர் உள்ள நிலையில், இவர்கள் அனைவருமே கொரோனா பரிசோதனை பணிகளில் களமிறக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பணி பாதுகாப்பு, உரிய உபகரணங்களை வழங்கி, கொரோனா முடியும் வரை கூடுதல் படி வழங்கிட அரசும், பொது சுகாதார துறையும் முன்வர வேண்டும்.

பற்றாக்குறை

தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணியில் லேப் டெக்னீசியன்கள் பற்றாக்குறையும் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. லேப் டெக்னீசியன்கள் கிரேடு பணியிடத்தில் மாவட்டத்தில் 2 அல்லது 3 பேர் மட்டுமே உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி வரும் கிரேடு 2 பணியிடத்திலும் பல்ேவறு காலிப்பணியிடங்கள் உள்ளன. எனவே கிரேடு3 பணியிடத்தில் உள்ளவர்களே அதிகளவில் கொரோனா பரிசோதனைக்கு களமிறக்கப்படுகின்றனர். இப்பரிசோதனைக்கு செல்வோர் ஒரு வாரம் பணியில் இருந்தால், அடுத்த வாரம் அரசு மருத்துவமனைக்கு சென்று தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அதற்கடுத்த ஒரு வாரம் வீட்டில் தனிமைப்படுத்தி ஓய்வெடுக்க வேண்டும். அதன் பின்னரே மீண்டும் பணிக்கு திரும்ப முடியும். இந்த சூழ்நிலை காரணமாக லேப் டெக்னீசியன்கள் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது.

Related Stories: