3-ம் கட்டத்திற்கு மாறுகிறதா தமிழகம்?: கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த மாதம் 24ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வருகிற 15ம் தேதி காலை 6 மணி வரை 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள்  நடமாட்டத்தை முற்றிலும் கட்டுப்படுத்தவும், கூட்டம் கூடுவதை தடுக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே வாங்க வெளியே வர வேண்டும் என்று  அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும், காய்கறி மார்க்கெட்டில் தினசரி காலை நேரங்களில் பொதுமக்கள் அதிகளவில் கூட்டம் கூட்டமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் நோயால் 950க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் இறந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆனாலும், தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது  நிலையிலேயே இருப்பதாகவும், சமூக பரவலை இன்னும் அடையவில்லை என்றும் அரசு அறிவித்துள்ளது. இந்த நிலையில், வருகிற 14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைவதால், இதை மேலும் நீட்டிக்க வேண்டுமா, முடித்துக்கொள்ளலாமா  என்பது குறித்து பிரதமர் மோடியும் அனைத்து மாநில முதல்வர்களிடம் நேற்று காலை வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார். பல மாநில முதல்வர்கள் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்துள்ளார். சென்னை புளியந்தோப்பைச் சேர்ந்த 45 பெண் ஓமந்தூரார் அரசு மருந்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு உயிரிழந்துள்ளார். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: