மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிப்பு ஏன்? உத்தவ் தாக்கரே விளக்கம்

மும்பை: மகாராஷ்டிராவில் ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியேதும் இல்லை என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்தார்.

பிரதமர் நரேந்திர மோடியுடனான நேற்றைய வீடியோ கான்பரன்சிங் ஆலோசனையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கை ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கேட்டுக் கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் நேற்று மாலை மகாராஷ்டிரா மக்களுக்கு உரையாற்றிய முதல்வர் உத்தவ் தாக்கரே, ஏப்ரல் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

கடந்த மார்ச் 24ம் தேதி நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு வரும் 14ம் தேதி முடிவுக்கு வருவதாக இருந்த நிலையில், மகாராஷ்டிராவில் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது; மும்பை, புனே உட்பட மகாராஷ்டிராவின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை. கொரோனா வைரசின் தாக்கம் அதிகமுள்ள பகுதிகளில் ஊரடங்கு சட்டம் கடுமையாக அமல்படுத்தப்படும். வைரஸ் தொற்று குறைவாக உள்ள பகுதிகளில் ஊரடங்கு காலத்தில் சில விதிவிலக்குகள் அளிக்கப்படும். ஒத்திவைக்கப்பட்டுள்ள கல்லூரி, பல்கலைகழகத் தேர்வுகள் மற்றும் அரசு பணிகளுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது, மூடப்பட்டுள்ள தொழிற்சாலைகளை மீண்டும் திறப்பது, மாநிலத்தில் சிக்கியுள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் குறித்து ஏப்ரல் 14ம் தேதிக்குள் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும்.

வாய்ப்புள்ள அனைவரும் தங்கள் வீடுகளில் இருந்தே அலுவலக வேலைகளை செய்ய வேண்டும். கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில், ஊரடங்கை நீட்டிப்பதை தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: