கிருஷ்ணகிரி அருகே சிவன் கோயிலில் அமர்ந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடிய எஸ்எஸ்ஐ: வைரலானது வீடியோ

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி அருகே, சிவன் கோயிலில் கொரோனா ஒழிப்பு பக்தி பாடல் பாடி விழிப்புணர்வில் ஈடுபட்ட பாரூர் போலீஸ் அதிகாரி பற்றிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதை மீறி தேவையின்றி சாலையில் சுற்றித்திரிவோரை வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு கையெடுத்து கும்பிடுவது, தோப்புக்கரணம் போட வைப்பது, உடற் பயிற்சி செய்ய வைப்பது, கொரோனா தடுப்பு உறுதிமொழி ஏற்க வைப்பது என பல்வேறு நூதன தண்டனைகளை போலீசார் வழங்கி வருகின்றனர்.

Advertising
Advertising

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம் பாரூர் போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வரும் வெங்கடாசலம், நூதன வழியை கையாண்டு வருகிறார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட இவர், வேலையின் போது பணிச்சுமை தெரியாமல் இருக்க, ஓய்வு இடைவேளையில் பக்தி பாடல்களை பாடுவது வழக்கம். தற்போது கொரோனா தொற்று நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், எஸ்எஸ்ஐ வெங்கடாசலம், தானே ஒரு விழிப்புணர்வு பாடலை எழுதி, அதனை எடுத்துக்கொண்டு பண்ணந்தூர் சிவன் கோயிலுக்கு சென்றார். அங்கு சீருடையில் அமர்ந்தவாறு, ராகம் போட்டு அந்த பாடலை பாடினார்.

நாட்டில் இருந்து கொரோனா வைரஸ் விலகி, மக்கள் சுபிட்சம் அடைய வேண்டிக்கொண்டு உருக்கமாக அவர் பாடியுள்ள அந்த பாடல் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறப்பு எஸ்ஐ வெங்கடாசலம், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து, மக்களை காக்க வேண்டி கோயிலில் பக்தி பாட்டு பாடியிருப்பது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: