கால் முறிந்த யானையை சிகிச்சைக்காக முதுமலை கொண்டு செல்ல திட்டம்

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி அணை அருகே கால் முறிந்து அவதிப்பட்ட யானையை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு கொண்டு வந்து இரண்டாவது நாளாக தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர்.கிருஷ்ணகிரி அணை அருகே, திம்மராயனஹள்ளி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் கடந்த இருதினங்களுக்கு முன், கால் முறிந்த நிலையில் ஆண் யானை ஒன்று தவித்துக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட வன அலுவலர் தீபக் பில்ஜி உத்தரவின்பேரில், வனத்துறை கால்நடை மருத்துவர் மூலம் வலி நீக்க ஊசிகள் போட்டு, உணவு மற்றும் தண்ணீர் வழங்கினர். பின்னர், அந்த யானையை கிரேன் மூலம் லாரியில் ஏற்றி, தேன்கனிக்கோட்டை வனச்சரகம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள கோவைபள்ளம் என்னுமிடத்திற்கு நேற்று முன்தினம் கொண்டு வந்தனர்.

 அங்கு வனத்துறை கால்நடை மருத்துவர் பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர், 2வது நாளாக யானைக்கு ஊசி போட்டு, உணவு மற்றும் பழங்கள் மூலம் மருந்து, மாத்திரைகளை வழங்கி சிகிச்சை அளித்து வருகின்றனர். கால் முறிந்துள்ளதால் உணவு உட்கொள்ள முடியாமல், அந்த யானை படுத்த படுக்கையாக உள்ளது. இதையடுத்து, முதுமலைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க ஆலோசனை செய்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: