முடக்கத்துக்கு பிறகு இயல்பு வாழ்க்கை வாழ முடியாது மக்கள் நடமாட்டத்தை தடுக்க பொது திட்டம் வகுக்க வேண்டும்: மாநில முதல்வர்களிடம் பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘முடக்கத்துக்குப் பிறகு மக்களின் இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இருக்க முடியாது. அவர்களின் நடமாட்டத்தை ஒழுங்குப்படுத்த, சில பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டம் வகுக்க வேண்டும்,’ என அனைத்து மாநில முதல்வர்களையும் பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.  உலகை ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் ஊரடங்கு உத்தரவால் அதிகமாக பரவாமல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தது. ஆனால், கடந்த 4 நாட்களாக திடீரென இது வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 50 பேரை பலி கொண்டுள்ள இது, 1,965 பேருக்கு பரவியுள்ளது. இதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் முடக்கத்தை பிரதமர் மோடி கடந்த 24ம் தேதி அறிவித்தார்.

இதனால், போக்குவரத்து முடங்கி சாலைகள் வெறிச்சோடின. பல்வேறு மாநிலங்களில் வேலை செய்து வந்த ஆயிரக்கணக்கான வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் சிக்கினர். அவர்களுக்கு வேண்டிய போக்குவரத்து வசதியும் இல்லாமல் போனதால், நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர். சமூக இடைவெளியை பற்றி அவர்கள் சிறிதும் கவலைப்படவில்லை. இதனால், இந்தியாவில் கொரோனா தாக்குதல் சமூக தொற்றாக மாறும் அபாயம் ஏற்பட்டதால், பிரதமர் மோடி கவலை அடைந்தார். எனவே, வெளிமாநில தொழிலாளர்களையும், தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே சுற்றுபவர்களையும் அரசின் தனிமை மையங்களில் 14 நாட்கள் அடைத்து, சாப்பாடு உள்ளிட்ட வசதிகளை செய்து தரும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்தது.   

இந்நிலையில், ஊரடங்கின் 9ம் நாளான நேற்று, கொரோனாவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து பல்வேறு மாநில முதல்வர்களுடன் காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதில் 9 மாநில முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். முதல்வர்களிடம் ஆற்றிய உரையில் மோடி கூறியதாவது: கொரோனா வைரஸ் நமது வாழ்க்கைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அதனால், மாநிலங்கள் முடக்கத்தை தீவிரமாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதை வலியுறுத்த வேண்டும். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, பாதிப்புள்ள இடங்களை அடையாளம் கண்டு, அவற்றை சுற்றி போர்கால அடிப்படையில் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். அடுத்த சில வாரங்களில் சோதனை, கண்டுபிடித்தல், தனிமைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். உயிர் பலிகள் குறைப்பதை உறுதி செய்வதுதான் நமது இலக்கு.

உலக நிலவரம் திருப்திகரமாக இல்லை. சில நாடுகளில் 2வது முறையாக இந்த பாதிப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. எனவே, முடக்கத்துக்குப் பின்பு, இயல்பு வாழ்க்கை வழக்கம் போல் இருக்க முடியாது. சில பாதுகாப்பு நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதை உறுதி செய்ய மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் பொதுவான திட்டம் தேவை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து நாம் வெளியேறும் யுக்திகளை மாநிலங்கள் தெரிவிக்க வேண்டும். மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் திட்டங்களை வகுக்க வேண்டும். கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற தனி மருத்துவமனைகள் கிடைப்பதை மாநில முதல்வர்கள் உறுதி செய்ய வேண்டும்.

டாக்டர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆயுஷ் டாக்டர்களையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். கொரோனா ஒழிப்பு பணியில், துணை மருத்துவப் பணியாளர்கள், என்சிசி மற்றும் என்எஸ்எஸ் மாணவர்களின் சேவைகளையும் பயன்படுத்தி கொள்ளலாம்.  இது அறுவடை காலம் என்பதால், முடக்கத்தில் இருந்து அரசு சில தளர்வுகளை அளித்துள்ளது. வங்கிகளில் கூட்டத்தை தவிர்க்க, பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான நிதி சீராக கிடைப்பதை உறுதி செய்வது அவசியம். உணவு தானியக் கொள்முதலை, வேளாண் உற்பத்தி சந்தை குழுக்களிடம் இருந்து மாநிலங்கள் கொள்முதல் செய்யலாம். இதற்கு மொபைல் ஆப் வசதிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். கொரோனாவை கட்டுப்படுத்த முடக்கத்தை அமல்படுத்தியதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் ஒரளவு வெற்றி கிடைத்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு அளித்த மாநிலங்களுக்கு நன்றி. இவ்வாறு மோடி பேசினார்.

கூடுதல் நிதி  ஒதுக்குவது பற்றி பதில் இல்லை:

கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில முதல்வர்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர். ஆனால், இது பற்றி நேற்று நடந்த காணொளி காட்சி ஆலோசனையில் பிரதமர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதற்கு முதல்வர்கள் கவலை தெரிவித்தனர்.

Related Stories: