கொரோனாவை கட்டுப்படுத்த அதிகளவில் மனிதவளம் தேவை: சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பெரிய அளவில் சமூக பரவலாக மாறவில்லை என்றாலும், அதன் பரவலை தடுக்க அதிகளவில் மனிதவளம் தேவைப்படுவதாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான மனிதவளம், அவர்களுக்கான பயிற்சிகள் தொடர்பாக அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய சுகாதார அமைச்சகம் ஆலோசனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பான மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

கொரோனா வைரஸ் பெரிய அளவில் சமூகப் பரவலாக மாறவில்லை என்றாலும், வைரஸ் தொற்றுள்ள 20 இடங்கள் மற்றும் வைரஸ் தீவிரமாக பரவும் அபாயமுள்ள 22 ஹாட்ஸ்பாட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. வைரசின் பரவல் சங்கிலியை துண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு போதிய மருத்துவ சேவையை வழங்கவும் உள்ளிட்ட கொரோனா கட்டுப்படுத்தும் பணிகளுக்காக நமக்கு அதிகளவில் மனிதவளம் தேவைப்படுகிறது.

அவர்களுக்கு, அமைச்சகத்தால் தயாரிக்கப்பட்ட ஆன்லைன் பயிற்சி திட்டங்கள் மூலம் பயிற்றுவிக்கப்பட வேண்டியதும் அவசியமாகும். கள கண்காணிப்பு, தொடர்புகளை கண்டறிதல், ரத்த, சளி மாதிரிகளை பத்திரப்படுத்தி அனுப்பி வைத்தல், மருத்துவமனையில் நோய் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணிகள், பயோமெடிக்கல் கழிவு மேலாண்மை, வென்டிலேட்டரை இயக்குதல், தனிமைப்படுத்துதலை கண்காணித்தல் போன்ற பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இந்த பயிற்சிகளை ஒருங்கிணைத்து முழுமையாக கண்காணிக்க உயர் அதிகாரிகளை மாநில அரசுகள் நியமிக்க வேண்டும். கொரோனா பாதிப்பில்லாத பகுதிகளில் மருத்துவ அவசர காலங்களுக்காக ஓய்வு பெற்ற டாக்டர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களை பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளை கண்டறிய மொபைல் ஆப்:

கொரோனா நோயாளிகளைக் கண்டறியவும், அது தொடர்பாக மக்களை எச்சரிக்கவும் சுகாதார பாலம் (ஆரோக்ய சேது) என்ற மொபைல் ஆப்-ஐ மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை வெளியிட்ட அறிக்கையில், `கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவரின் மொபைல் எண், சுகாதார பாலம் செயலி, மத்திய சுகாதாரத்துறை பதிவேட்டில் பதிவேற்றம் செய்யப்படும். பின்னர், கொரோனா பாதித்தவர் மக்கள் அருகே சென்றால், சுகாதார பாலம் செயலியை பதிவிறக்கம் செய்திருப்பவர்களின் மொபைலில் கொரோனா பாதித்தவர் நெருங்கி வருவது எச்சரிக்கப்படும். இதன் மூலம், கொரோனா பாதித்தவர் தம்மை நெருங்கி வருவதை தெரிந்து கொள்வது மட்டுமல்லாமல், இது குறித்து பிறரையும் எச்சரிக்கலாம்,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: