கேரளாவில் இருந்து நெல்லைக்கு திரும்பிய 10 பேர் கண்காணிப்பு

பேட்டை: நெல்லையை அடுத்த பழவூர் பகுதியில் கேரளாவிலிருந்து திரும்பிய 10 பேரை சுகாதாரக் குழுவினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெல்லை சுத்தமல்லியை அடுத்த பழவூரைச் சேர்ந்த 10 பேர் கேரளாவில் வேலை பார்த்து வந்த நிலையில் தற்சமயம் வணிக நிறுவனங்கள் மூடப்பட்டதால் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதுபற்றி அறிந்ததும் சுகாதாரத் துறையினர் அங்கு விரைந்து முகாமிட்டு தகவல்களை சேகரித்ததுடன் நோய் தொற்று உள்ளதா, பரிசோதனைக்கு பின் தமிழகத்திற்குள் வந்தனரா என விசாரித்தனர். அத்துடன் அவர்களை 2 வாரங்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் அவர்களது முகவரி, போன் நம்பர் போன்றவற்றை சேகரித்தனர். தொண்டை புகைச்சல், மூச்சு திணறல் மற்றும்காய்ச்சல் போன்ற அறிகுறி தெரியவந்தால் உடனடியாக மருத்துவமனையை தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொண்டனர். இதேபோல் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரளாவிலிருந்து பழவூருக்கு திரும்பிய 10 பேரையும் சுகாதார துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கொரோனா வைரஸால் மக்கள் பீதியடைந்துள்ள நிலையில் பேட்டை, சுத்தமல்லி பகுதி மக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.

சுகாதார துறையினர் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்கள், நோயின் தீவிரம் அறியாமல் நண்பர்களுடன் கூடி கும்மாளம் அடிப்பது, மாணவர்கள், இளைஞர்கள் கிரிக்கெட் விளையாடுவது போன்றவை தொடர்கிறது.

Related Stories: