8 மாதங்களாக வீட்டுக் காவலில் இருந்த காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் விடுதலை: பொது பாதுகாப்பு சட்ட வழக்கு ரத்து

ஸ்ரீநகர்: எட்டு மாதங்கள் வீட்டுக் காவலில் இருந்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா நேற்று விடுதலை செய்யப்பட்டார்.  ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பலர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி மற்றும் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.  

ஜம்மு காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய போதும் இவர்கள் விடுவிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி 5ம் தேதி உமர் அப்துல்லா மீது பொது பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. அதற்கு முன்பாகவே, பரூக் அப்துல்லா மீதான இச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. சமீபத்தில் இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது 8 மாத சிறைவாசம், அதாவது 232 நாட்களுக்கு பின்னர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவும் நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவர் மீதான பொது பாதுகாப்பு சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர்களில் மெகபூபா முப்தி மட்டும் இன்னும் விடுதலை செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: