மத்திய பிரதேச சட்டப் பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் சவுகான் அரசு வெற்றி: காங்கிரஸ் புறக்கணிப்பு

போபால்: மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில், முதல்வர் சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜ அரசு வெற்றி பெற்றது.  மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வந்தது. அக்கட்சியை சேர்ந்த ஜோதிராதித்யா சிந்தியா, அக்கட்சியில் இருந்து விலகி பாஜ.வில் இணைந்தார். இதைத் தொடர்ந்து, காங்கிரசை சேர்ந்த இவருடைய ஆதரவு எம்எல்ஏ.க்கள் 22 பேர் ராஜினாமா செய்தனர். இதனால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது.  நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமல், முதல்வர் கமல்நாத் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சிவராஜ் சவுகான் தலைமையிலான பாஜ அரசு நேற்று முன்தினம் இரவு எளியமுறையில் பதவியேற்றது.

இம்மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர்கள் பலம் 230.

இதில், 2 எம்எல்ஏ.க்கள் இறந்ததால் 228 ஆக பலம் குறைந்தது. தற்போது, பாஜ.வுக்கு 107 எம்எல்ஏ.க்கள் உள்ளனர். 22 பேர் ராஜினாமா செய்ததால், காங்கிரசின் பலம் 92 ஆக குறைந்துள்ளது.  இதுதவிர, 4 சுயேச்சைகள், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி உறுப்பினர்கள் உள்ளனர். இது தவிர, 24 இடங்கள் காலியாக உள்ளன. இதனால், பேரவையின் பலம் 206 ஆக உள்ளதால் பெரும்பான்மைக்கு 104 எம்எல்ஏ.க்கள் இருந்தாலே போதுமானது. இந்நிலையில், மத்திய பிரதேச சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், கூட்டம் தொடங்கியதும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானத்தை கொண்டு வந்தார். புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற பாஜ மூத்த எம்எல்ஏ ஜெகதீஷ் தேவ்டா, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டார். குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில், சவுகான் அரசு வெற்றி பெற்றதாக ஒருமனதாக அறிவிக்கப்பட்டது.

இந்த வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் யாரும் பங்கேற்கவில்லை. கமல்நாத் அரசுக்கு ஆதரவு தெரிவித்து வந்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏ.க்கள் 2 பேர், சமாஜ்வாடி எம்எல்ஏ ஒருவர், 2 சுயேச்சை எம்எல்ஏ.க்கள், சிவராஜ் சிங் சவுகானுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.  நம்பிக்கை வாக்கெடுப்புக்கு பிறகு, சட்டப் பேரவையை வரும் 27ம் தேதிக்கு சபாநாயகர் தேவ்டா ஒத்திவைத்தார். வெற்றி குறித்து முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அளித்த பேட்டியில், ‘`காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் அவைக்கு வராதது ஜனநாயகத்துக்கு விரோதமான நடவடிக்கை,’’ என்றார். காங்கிரஸ் எம்எல்ஏ.வும், முன்னாள் அமைச்சருமான பிசி சர்மா கூறுகையில், ‘`இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு அர்த்தமற்றது. காலியாக உள்ள 24 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க இடைத்தேர்தல் நடத்தப்பட்ட பிறகு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சரியாக இருக்கும்,’’ என்றார்.

சவுகானுடன் கமல்நாத் திடீர் சந்திப்பு:

புதிய முதல்வர் சிவராஜ் சிங் சவுகானை போபாலில் முன்னாள் முதல்வர் கமல்நாத் நேற்று திடீரென சந்தித்து பேசினார். பின்னர் கமல்நாத் அளித்த பேட்டியில், ‘‘மாநிலத்தின் மேம்பாட்டுக்கு ஆதரவாக இருப்பேன் என முதல்வர் சவுகானிடம்  உறுதியளித்து உள்ளேன்,’’ என்றார். அப்போது, ‘நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது ஏன்?’ என்ற கேள்விக்கு, ‘`இந்த கூட்டம் தொடர்பாக காங்கிரஸ் எம்எல்ஏ.க்களுக்கு தகவல் கிடைக்கவில்லை,’’ என தெரிவித்தார்.

சபாநாயகர் ராஜினாமா:

சிவராஜ் சிங் சவுகான் முதல்வராக பொறுப்பேற்றதை தொடர்ந்து சபாநாயகராக இருந்த பிரஜாபதி நேற்று முன்தினம் இரவே தனது பதவியை ராஜினாமா செய்தார். கமல்நாத் முதல்வரானபோது கோடேகான் தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ.வான பிரஜாபதி. பாஜ.வின் கடும் எதிர்ப்புக்கிடையே சபாநாயகராக பொறுப்பேற்றார். இந்நிலையில், தனது விலகல் கடிதத்தை துணை சபாநாயகர் ஹினா கவ்ரேயிடம் நேற்று முன்தினம் இரவு பிரஜாபதி வழங்கினார். அப்போது அவர் அளித்த பேட்டியில், ‘‘தார்மீக அடிப்படையில் சட்டப்பேரவை சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்கிறேன்,’’ என்றார்.

Related Stories: