கூடுதல் விலைக்கு விற்பனை புதுவையில் 3 மருந்தகங்களில் 2,883 முக கவசங்கள் பறிமுதல்

புதுச்சேரி: புதுச்சேரியில் 3 மருந்தகங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில்  கூடுதல் விலைக்கு விற்க பதுக்கி வைத்திருந்த 2,883 முக கவசங்கள் அதிரடியாக  பறிமுதல் செய்யப்பட்டது. புதுவையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினி  தடுப்பு பொருட்கள் பதுக்கி வைக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்பனை  செய்யப்படுவதாகவும் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து  கலெக்டர் அருண் உத்தரவின்பேரில், சட்டமுறை மற்றும் எடையளவு கட்டுப்பாட்டு  அதிகாரி தயாளன் தலைமையிலான குழுவினர் கடந்த ஒரு வாரமாக புதுவையில் நகரம்  மற்றும் கிராமப்புறங்களில் உள்ள மருந்து மற்றும் பார்மசிஸ்ட் கடைகளில்  அதிரடி சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் மாஸ்க் (முக கவசம்) பதுக்கி  வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்றது தெரியவந்தது.

அதன்படி விவிபி நகரில் உள்ள ஒரு மருந்தகத்தில் இருந்து 2,313 மாஸ்குகள் கைப்பற்றப்பட்டன. அம்பலத்தடையார் மடம் வீதி, பாரதி  வீதியில் உள்ள 2 கடைகளில் இருந்து 500, 70 மாஸ்குகள் பறிமுதல்  செய்யப்பட்டன. அவற்றை 20 மற்றும் 13க்கு விற்றது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து மொத்தம் 2,883 மாஸ்குகளை கைப்பற்றினர். சம்பந்தப்பட்ட 3 நிறுவனங்கள் மீதும் வழக்குபதிவு  செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் அருண் தெரிவித்துள்ளார். அவரது  உத்தரவின்பேரில் மருந்து நிறுவனங்களில் எடையளவு துறை அதிகாரிகளின் சோதனை  தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

Related Stories: