வழக்கமான காலை 11 மணிக்கு பதிலாக திங்களன்று பகல் 2 மணிக்கு நாடாளுமன்றம் தொடங்கும்: விமானம், ரயில்கள் ரத்தால் நடவடிக்கை

புதுடெல்லி: திங்களன்று வழக்கத்துக்கு மாறாக மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக, நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கும். ஆனால், கொரோனா வைரஸ் பிரச்னையால், நாளை மறுதினம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் வழக்கம்போல் 11 மணிக்கு கூடாது என்றும், வழக்கத்துக்கு மாறாக பிற்பகல் 2 மணிக்கு கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக தங்கள் தொகுதிகளில் இருந்து தலைநகர் டெல்லிக்கு வருவதற்கு முடியவில்லை என்றும், ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா அவையில் கூறுகையில், “இந்த நேரம் மாற்றமானது இந்த திங்களன்று மட்டும்தான் பொருந்தும். வருகிற 30ம் தேதி திங்களன்று அவை வழக்கம் போல் குறித்த நேரத்தில் தொடங்கும்,” என்று குறிப்பிட்டார்.

இதேபோன்ற அறிவிப்பை மாநிலங்களவையில் அவை தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “பிரதமர் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதில், நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும்,” என்றார்.

Related Stories: