மாநிலங்களவையில் கடும் எதிர்ப்புக்கு இடையே எம்பி.யாக கோகாய் பதவியேற்பு: எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு

புதுடெல்லி: எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே, மாநிலங்களவை நியமன உறுப்பினராக உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று பதவியேற்று கொண்டார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் 13 மாதங்கள் பதவியில் இருந்தபோது அயோத்தி வழக்கு, ஓரினச் சேர்க்கை தடை நீக்கம், சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது, ரபேல் போர் விமானம் வழக்கு, தேசிய பொதுமக்கள் பதிவேடு உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு அளித்தார். இவர் கடந்தாண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். இந்நிலையில், மாநிலங்களவை நியமன உறுப்பினர் கே.டி.எஸ். துளசியின் பதவிக் காலம் சமீபத்தில் முடிந்தது. மத்திய அரசின் பரிந்துரையை ஏற்று, புதிய நியமன எம்பி.யாக கோகாயை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்தார். இந்த நியமனத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில், மாநிலங்களவைக்கு நேற்று வந்த கோகாய், நியமன எம்பி பதவியை ஏற்றுக் கொண்டார். அவருக்கு மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அப்போது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், ‘வெட்கமில்லையா?, விலை போய் விட்டீர்களா,’ என்று கோஷமிட்டனர். பின்னர் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். மாநிலங்களவையில் பதவிப் பிரமாணத்தின் போது எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்வது இதுவே முதல் முறையாகும். பின்னர் பேசிய சட்ட அமைச்சர் ரவி சங்கர், ``அவையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொண்ட விதத்தை சிறிதும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது’’ என்றார்.

* பாஜ குற்றச்சாட்டு; காங்கிரஸ் மறுப்பு

காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் முன்னாள் நீதிபதிகள், மாநிலங்களவை நியமன எம்பி.யாக நியமிக்கப்பட்டு இருப்பதாக பாஜ கூறிய குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. அதில், ‘ஓய்வு பெற்ற 4 மாதங்களில் ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை நியமன உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது நீதித்துறை சுதந்திரத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை அசைத்து பார்த்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் 7 ஆண்டுகளுக்கு பின்னரே நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். கோகாயைப் போன்று 4 மாதங்களில் நியமிக்கப்படவில்லை,’  என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: