கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தப்புமா!...சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தொடர்ந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென ஜோதிராதித்யா சிந்தியா தலைமையில் 22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் அவரது அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவியை பாஜக அரசு கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 22 பேர் பதவி விலகியதை அடுத்து கமல்நாத் தலைமையிலான அரசு மெஜாரிட்டியை இழந்துவிட்டது என்றும் இதனால் முதல்வர் கமல்நாத் தனது அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் முன்னாள் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இன்று இந்த வழக்கில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மத்திய பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும்போது வீடியோ பதிவு செய்யவும், வாக்கெடுப்பில் 16 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் பங்கெடுக்க விரும்பினால் கர்நாடக டி.ஜி.பி மற்றும் ம.பி. டி.ஜி.பி பாதுகாப்பளிக்கவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜோதிராதித்ய சிந்தியாவின் தாவலுக்குப் பிறகு நிலைமை பெரிதாக நாறியிருக்கும் என்று நம்பப்படும் நிலையில், சட்டசபையில் பெரும்பான்மைய நிரூபிக்க வேண்டிய கட்டாயம் கமல்நாத்துக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: