ஆழியார்-வால்பாறை மலைப்பாதையில் வாகனங்களை விரட்டிய ஒற்றை யானை: பொதுமக்கள் பீதி

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த ஆழியார்- வால்பாறை மலைப்பாதையில், வாகனங்களை வழிமறித்து விரட்டிய ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அருகே நவமலையில் உள்ள மலைவாழ் குடியிருப்பு பகுதியில் சமீப காலமாக காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக, ஒற்றை காட்டு யானை, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஆழியாரில் இருந்து வால்பாறை மலைப்பாதைக்கு செல்லும் ரோட்டில் உலா வருகிறது. அதுமட்டுமல்லாமல் அருகே உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை, வாழைகளை சேதப்படுத்தி வருவதுடன் வன சோதனைச்சாவடி அருகே தடுப்பு கம்பிகளை உடைத்துள்ளது. அந்த காட்டு யானையை, வனத்திற்குள் விரட்டும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மாங்கரை பீட் பகுதியான பெரியசோலை எனும் இடத்துக்கு இடம்பெயர்ந்த அந்த ஒற்றை யானை, நேற்று முன்தினம் மீண்டும் வால்பாறை ரோடு குரங்கு அருவி அருகே வந்தது. பின்னர், அந்த ரோட்டில் நீண்டநேரம் நின்றது. இதனால், அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விரைந்து செல்ல முடியாமல் தவித்தனர்.அதன்பின், மாலை நேரத்தில், ஆழியாரில் இருந்து வால்பாறைக்கு செல்லும் மலைப்பாதை ரோட்டில் சென்ற வாகன ஓட்டிகளை அந்த யானை விரட்டியது. இதனால், பலர் வாகனங்களை திரும்பிக் கொண்டு தப்பினர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்ட வனத்துறையினர், யானையை வனத்திற்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு, அந்த யானை அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றது. இருப்பினும், தினமும் வால்பாறை மலைப்பாதையில் அந்த ஒற்றை யானை நின்று வாகனங்களை வழிமறிப்பதால், அந்த வழியாக செல்ல வாகன ஒட்டிகள் அச்சமடைகின்றனர்.

Related Stories: