விளையாட்டு உலகையும் ஆட வைத்தது கொரோனா: பிரபல பிரஞ்ச் ஓபன் டென்னிஸ், யூரோ கால்பந்து போட்டிகள் ரத்து

பிரான்ஸ்: உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வரும் கொரோனா அச்சம் எதிரொலியாக பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி மற்றும் யூரோ கால்பந்து போட்டி ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளன. கலிமண் மைதானத்தில் நடைபெறும் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி, மே மாதம் 24ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டி, செப்டம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வீரர்களுக்கு தகவல் தெரிவிக்காமல் பிரஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொரோனா அச்சத்தால், ஜூன் 12ம் தேதி தொடங்கவிருந்த புகழ்பெற்ற யூரோ கோப்பை கால்பந்து போட்டியும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா மிரட்டலையும் மீறி திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டிகளை நடத்த ஜப்பான் திட்டமிட்டுள்ளது. இதனை அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். முன்னதாக ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்யுமாறு ஜப்பான் மக்கள் அரசிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை நிராகரித்துவிட்ட ஷின்சோ அபே, திட்டமிட்டபடி ஒலிம்பிக் போட்டி நடைபெறும் என்று அறிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தொட்டுள்ளது. 1,97,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 16% அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 345 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 2,503 பேர் இறந்திருக்கின்றனர். இதேபோல ஈரானில் 988 பேரும், ஸ்பெயினில் 533 பேரும் கொரோனாவல் உயிரிழந்துள்ளனர், என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: