ஆந்திராவில் 25ம் தேதி உகாதி பண்டிகையன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

திருமலை: ஆந்திராவில் வரும் 25ம் தேதி உகாதி பண்டிகையன்று இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று மாநில  தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநில அரசு தெலுங்கு வருடப் பிறப்பான வரும் 25ம் தேதி உகாதி அன்று மாநிலம் முழுவதும் உள்ள 26 லட்சம் பயனாளிகளுக்கு இலவசமாக  வீட்டுமனைப்பட்டா வழங்குவதாக அறிவித்திருந்தது. இதற்காக மாநிலம் முழுவதும் மாவட்டம் வாரியாக அரசு நிலம் கையகப்படுத்தப்பட்டதோடு,  தனியார் நிலமும் அரசு சார்பில் விலைக்கு வாங்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல்  விதிகள் அமலில் உள்ளது. இந்த நேரத்தில் வீட்டுமனை பட்டா வழங்கினால் வாக்காளர்களை கவர்வதற்காக ஆளுக்கட்சியினர் செய்யும் சதியாகும்.  எனவே, இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி சார்பிலும் பொது நல வழக்கும் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்நிலையில்   மாநில தேர்தல் ஆணையாளர் ரமேஷ்குமார் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் மாநில  அரசின் இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும்’’ என்று மாவட்ட கலெக்டர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டுள்ளார். இதனால் தேர்தல் நிறைவு பெற்ற பிறகு ஏப்ரல் முதல் வாரத்தில் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும்   என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தெலுங்கு தேசம் வேட்பாளர் கைது

சித்தூர் மாவட்டம், கே.வி.பி.புரம் மண்டல பரிஷத் தெலுங்கு தேசம் வேட்பாளர் மல்லிகார்ஜுனா வீட்டில்  வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக  மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மல்லிகார்ஜுனா வீட்டிற்கு சென்ற போலீசார், அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பறிமுதல்  செய்தனர். பின்னர் மல்லிகார்ஜுனாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து மல்லிகார்ஜுனா கூறுகையில், ஆளுங்கட்சியினர் வேண்டுமென்றே என் மீது பழி சுமத்துவதற்காக அவர்களே மதுபாட்டில்களை கொண்டு  வந்து வைத்துவிட்டு இதுபோன்று செய்கின்றனர். என் வீட்டில் எவ்வாறு மதுபாட்டில்கள் வந்தது என்று எனக்கு தெரியாது என்றார்.

Related Stories: