ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா விவேகானந்தா கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகனின் சித்தப்பா கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றிஉயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஆந்திராவின், புலிவெந்துலாவில்  அம்மாநில முதல்வர் ஜெகன் மோகனின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரிக்க அப்போதைய முதல்வர் சந்திரபாபு, சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தார். அதன்படி, விசாரணை நடந்து வந்த நிலையில் பொதுத்தேர்தல் நடந்தது. இதில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்  வெற்றி பெற்று  ஜெகன்மோகன் முதல்வர் ஆனார். பின்னர் சந்திரபாபு அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவை கலைத்து  தனி புலனாய்வு குழுவை ஜெகன்மோகன் அரசு அமைத்தது. இந்த குழுவினர் முன்னாள் அமைச்சர் ஆதிநாராயணரெட்டி, கடப்பா ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்பி அவினாஷ் ரெட்டி உள்பட 1,400 பேரிடம் விசாரணை நடத்தினர்.

இந்நிலையில், இந்த வழக்கில்  அலட்சியமாக இருந்ததாக புலிவெந்துலா இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தொடர்ந்து இந்த கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி அவரது மகள் சுனிதா, முன்னாள் அமைச்சர் ஆதிநாராயண ரெட்டி மற்றும் எம்எல்சி பிடெக் ரவி ஆகியோர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இருதரப்பு வாதங்கள் முடிந்து இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விவேகானந்தரெட்டி கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி கோர்ட் உத்தரவிட்டது. விவேகானந்தரெட்டி கொலை செய்யப்பட்டு ஓராண்டு நிறைவு பெற்று இதுவரை குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலையில் சிபிஐ விசாரணையால்  விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: