புதுடெல்லி: `சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்திருப்பதால், பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்க வேண்டும்,’ என்று மத்திய அரசை காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இது பற்றி காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2004 நவம்பரில் கச்சா எண்ணெய் விலை பேரல் 38.9 அமெரிக்க டாலராக இருந்தது. தற்போது நேற்றைய நிலவரப்படி, இது 35.71 அமெரிக்க டாலராக உள்ளது. எனவே, 2004க்கு முன்பிருந்த விலைக்கே பெட்ரோல், டீசல், எரிவாயு ஆகியவற்றின் விலைகளை அரசு குறைக்க வேண்டும். அதை விடுத்து, பெட்ரோல் விலையில் ரூ.2.69, டீசல் விலையில் ரூ.2.33 என கொஞ்சமாக குறைத்திருப்பது, `வைக்கோல் பொதியில் குண்டூசியை போட்டது’ போன்று மக்களை ஏமாற்றும் செயலாகும்.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி.யின் கீழ் கொண்டு வர வேண்டும். கடந்த 2014ல் மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின்னர், கலால் வரி பெட்ரோலுக்கு 218 சதவீதமும், டீசலுக்கு 458 சதவீதமும் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான சுங்கவரியும் லிட்டருக்கு முறையே ரூ.19.98, ரூ.15.83 என அதிகரித்துள்ளது. முன்னதாக இவை லிட்டருக்கு ரூ.9.2 ஆகவும் ரூ.3.46 ஆக மட்டுமே இருந்தன. பதினைந்து ஆண்டுகளுக்கு முன், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியில் இருந்த போது, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.37.84க்கும், டீசல் ரூ.26.28க்கும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.281.60க்கும் விற்பனையானது.
ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக மோடி அரசும், எண்ணெய் நிறுவனங்களும் இணைந்து ரூ.16 லட்சம் கோடியை மக்களிடம் இருந்து அதிகப்படியான வரி என்ற பெயரில் சுரண்டி உள்ளனர். அதனால் தான், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ள நிலையிலும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை எட்டும் அளவுக்கும், விமானத்திற்கான பெட்ரோலின் விலையை விட கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது. இதுவா மக்களுக்கான அரசாங்கம்?. இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.