கன்னியாகுமரி கடற்கரையில் இறந்து கிடந்த போலீஸ்காரர் தற்கொலையில் சதியா?

* கள்ளக்காதலியிடம் வாக்குமூலம் பெற முடிவு

* விசாரணையில் பரபரப்பு தகவல்கள் அம்பலம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி கடற்கரையில் ெகால்லம் போலீஸ்காரர் விஷம் குடித்த நிலையில் இறந்து கிடந்த சம்பவத்தில் சதிதிட்டம் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கொல்லம் மாவட்ட  காவல்துறை டிரைவராக பணியாற்றியவர் போஸ் (42). இவருக்கும் அதே  பகுதியை சேர்ந்த சுப்ரியா (30) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த 6ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த இவர்கள் இங்குள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினர். இந்நிலையில் நேற்று அதிகாலை போஸ் வாவதுறை கடற்கரையில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.

சுப்ரியா அவர்கள் தங்கி இருந்த அறையில் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். கன்னியாகுமரி போலீசார் சுப்ரியாவை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் போஸ் உடல் பிரேத பரிசோதனை முடிந்து நேற்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறை டிரைவராக பணியாற்றிய போஸ்சுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

திருமணமான சுப்ரியா கணவரை விவகாரத்து செய்து விட்டு தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட பின் இருவரும் கணவன் மனைவி போல் சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில் ஜாலியாக இருப்பதற்காக கன்னியாகுமரிக்கு வந்த இவர்கள் சொகுசு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தனர். இந்த நிலையில் போஸ் விஷம் குடித்து இறந்தது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், போஸ் அதிகாலை 2 மணியளவில் எழுந்து வெளியே சென்றுள்ளார். காலை 5.30 மணியளவில் அவர் வாவத்துறை கடற்கரையில் இறந்து கிடந்தார்.

அதற்கு பின்னர் போலீசார் அறைக்கு சென்றபோது அங்கு சுப்ரியாவும் விஷம் குடித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இருவரும் சேர்ந்து விஷம் குடித்திருந்தால் 2 மணிக்கு முன்னரே குடித்திருக்க வேண்டும். அப்படியென்றால் போஸ் மட்டும் இறந்தது எப்படி என்ற சந்தேகம் உருவாகி உள்ளது. எனவே போஸ் மரணத்தில் சதித்திட்டம் ஏதாவது இருக்கலாமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக சுப்ரியாவிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரது உடல்நிலை சீரானதும் நாளை அவரிடம் வாக்குமூலம் பெறுகின்றனர்.

போலீஸ்காரர் போஸ் தற்கொலை தான் செய்தாரா? அல்லது விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டரா? இதற்கு பின்னால் வேறு யாராவது உள்ளார்களா? என போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Related Stories: