கொரோனா, பறவைக் காய்ச்சல் என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை தமிழக அரசிடம் உள்ளது: அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி: கொரோனா, பறவைக் காய்ச்சல் என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை தமிழக அரசிடம் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் துரைசாமிபுரம், காட்டாலம்குளம் பகுதிகளில் அரசு கால்நடை கிளை மருத்துவமனைகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று திறந்து வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இரண்டு ஊராட்சிகளில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதை அடுத்து அங்கு அதிகாரிகள் முகாமிட்டு பறவைகளை முற்றிலுமாக அழித்தனர். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் தற்போது, 26 இடங்களில் சுகாதாரத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரியில் 8, கோவை மாவட்டத்தில் 12 இடங்கள், தென்காசி, கன்னியாகுமரி ஆகிய இடங்களிலும் மருத்துவ குழுக்கள் இயங்குகின்றன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டே உள்ளே அனுமதிக்கப்படுகின்றன.

அதேபோல் தமிழகத்தில் இருந்து கேரளா சென்றுவரும் வாகனங்களும் முழுமையாக சுத்தப்படுத்திய பின்னரே மீண்டும் தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. கொங்கு மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகள் அனைத்தும் தீவிர கண்காணிப்பில் உள்ளன. பறவைக்காய்ச்சல், கொரானா என எது வந்தாலும் சமாளிக்கக் கூடிய திறமை தமிழக அரசிடம் உள்ளது. எவ்வித அச்சமும் தேவையில்லை. பறவைக் காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். வரும்முன் காப்போம் என்ற அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால், பறவைக் காய்ச்சல் தொடர்பாக வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். முன்னதாக, கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் கோழிப் பண்ணைகளில் வளர்த்து வந்த கோழிகள் திடீரென மடிந்து விழ துவங்கியதால் இறந்த கோழிகளை கேரள கால்நடைத்துறை சோதனை செய்தது. அப்போது கோழிகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, பறவைக் காய்ச்சல் பரவுவதை தடுக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: