போடி அருகே கொட்டகுடி மயானப் பாதையில் ஆக்கிரமிப்பு: இறுதி காரியங்களுக்கு செல்வோர் அவதி

போடி: போடி அருகே, கொட்டகுடி கிராமத்தில் மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து இருப்பதால், இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், இறுதி காரியங்களுக்கு வருவோர் அவதிப்படுகின்றனர். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கொட்டகுடி கிராம பஞ்சாயத்தில் குரங்கணி, முட்டம், துவாக்குடி, சென்ட்ரல் துவாக்குடி, சென்ட்ரல் ஸ்டேஷன், டாப் ஸ்டேஷன் கொழுக்குமலை உள்ளிட்ட பல பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

கொட்டகுடி கிராமத்தில் மட்டும் மலைவாழ் மக்கள் உள்ளிட்ட மூன்று சமுதாயத்திற்கு தனித்தனியாக மயானம் அமைக்கப்பட்டு, அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில், ஒரு சமுதாயத்திற்கு கொட்டகுடி கிழக்கு திசையில் சுமார் 2 கிலோ மீட்டர் அளவில் மயானம் அமைந்துள்ளது. இதன் அருகே கடந்த 2009-10ம் ஆண்டு ரூ.2.50 லட்சத்தில் காத்திருப்போர் அறை சுற்றுச்சுவருடன் கட்டிக் கொடுக்கப்பட்டது. இந்நிலையில், இந்த மயானத்திற்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து, இலவம் தோப்புகளாக மாற்றி உள்ளனர்.

இதனால், பாதை இல்லாமல் இறந்தவர்களின் உடல்களை கொண்டு செல்வதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாதை ஓரங்களில் இறந்தவர்களின் உடல்களை சுமந்து கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்து செல்கின்றனர். அதன்பின் மயானத்திற்கு சென்று நல்லடக்கம் மற்றும் தகனம் செய்து வருகின்றனர். மயானப் பாதை ஆக்கிரமிப்பை அகற்றி, இறுதி காரியங்கள் செய்ய வழி ஏற்படுத்த வேண்டும் என சமூக பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட தாசில்தார், போடி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: