வெறுப்பு பேச்சு வழக்கில் டெல்லி கலவரத்தில் பாதித்தவரை மனுதாரராக சேர்க்க முடியாது: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு

புதுடெல்லி: மத்திய அரசு எழுப்பிய வெறுப்பு பேச்சு வழக்கில், டெல்லி கலவரத்தில் பாதிக்கப்பட்டவர் தலையிட உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது. டெல்லி கலவரத்துக்கு பா.ஜ தலைவர்களின் வெறுப்பு பேச்சுதான் காரணம். அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என ஹர்ஸ் மந்தர் என்பவர் கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், அவரும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு(சிஏஏ) எதிராக நடந்த போராட்டங்களில், உச்சநீதிமன்றம், அதன் நீதிபதிகள், மத்திய அரசு மற்றும் நாடாளுமன்றம் பற்றி தரக்குறைவான கருத்துக்களை தெரிவித்ததால், அவர் மீது வெறுப்பு பேச்சு வழக்கை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் தலையிட, டெல்லி கலரவரத்தில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் விரும்புவதாக வக்கீல் காலின் கன்சால்வ்ஸ் தெரிவித்தார். இதை அனுமதிக்க மாட்டோம் என தலைமை நீதிபதி தெரிவித்தார். ஹர்ஸ் மந்தர் பேச்சின் வீடியோவை தான் பார்த்ததாகவும், அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க விரும்புவதாகவும் கான்சல்வ்ஸ் தெரிவித்தார்.

இதற்கு பதில் அளித்த தலைமை நீதிபதி பாப்டே, அந்த வீடியோவை தாக்கல் செய்யும்படி சொலிசிட்டர் ஜெனரலிடம் கூறியுள்ளோம் என்றார்.

* ஹோலி விடுமுறைக்கு சிறப்பு அமர்வு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அமர்வில் ஆஜரான வழக்கறிஞர் ஒருவர், தனது வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த பாப்டே, ‘‘ஹோலி பண்டிகையை முன்னிட்டு உச்சநீதிமன்றத்துக்கு ஒரு வார கால விடுமுறை அறிவிக்கப்படவுள்ளது. அப்போது அவசர வழக்குகளை விசாரிக்க விடுமுறைக்கால அமர்வு அமைக்கப்படும்’’ என தெரிவித்தார்.

Related Stories: