கோவையில் இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மீது இரும்பு கம்பியால் தாக்குதல்

கோவை: கோவை போத்தனூர் கடைவீதியை சேர்ந்தவர் ஆனந்த் (33). இந்து முன்னணி  மாவட்ட செயலாளர். இவர், நேற்று முன்தினம் இரவு காந்திபுரத்தில் இந்து அமைப்புகள் சார்பில் நடைபெற்ற குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவான காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர்  பைக்கில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். இரவு 9 மணியளவில் நஞ்சுண்டாபுரம் நொய்யல் பாலம் அருகே பின்னால் பைக்கில் வந்த 2 பேர் இரும்பு கம்பியால் ஆனந்த் தலையில் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பினர். இதில், படுகாயம் அடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தலையில் 15 தையல் போடப்பட்டது.

இதை கேள்விப்பட்ட இந்து அமைப்பை சேர்ந்தவர்கள் கோவை அரசு மருத்துவமனையில் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. நள்ளிரவு மேல்சிகிச்சைக்காக ஆனந்த், கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக போத்தனூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பதற்றம் நிலவுவதால் 300 அதிரடிப்படை போலீசார் உட்பட 1500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: