சி.ஏ.ஏக்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து அப்புறப்படுத்துங்கள் : தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருப்பூரில் அனுமதியின்றி போராட்டம் நடத்துபவர்களை கைது செய்து அப்புறப்படுத்த தமிழக போலீஸ் டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத போராட்டங்களை தடுக்க கோரி வழக்கறிஞர் கோபிநாத் தொடர்ந்து வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு உத்தரவு பிறப்பித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தில் மனு

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதைத் தொடர்ந்து தமிழகத்திலும்  குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராகவும் ஆதராகவும் பல இடங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. இதற்கிடையே, திருப்பூரில் கடந்த இரு தினங்களாக குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் ஆகவே திருப்பூரில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டவிரோதமாக நடைபெறும் போராட்டங்களை தடுக்க கோரியும் வழக்கறிஞர் கோபிநாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், போராட்டத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

தமிழக டிஜிபிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

இந்த மனு இன்று நீதிபதி சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் நடைபெறும் சட்ட விரோத போராட்டங்கள் தொடர்பாக 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள் வழக்குப்பதிவு செய்த பின்னரும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தாதது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அத்துடன் அனுமதியின்றி போராட்டம் நடத்தும் அனைவரையும் கைது செய்து அப்புறப்படுத்துமாறு டிஜிபிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories: