மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க சதி எம்எல்ஏ.க்களை கடத்தியது பாஜ: காங்.குற்றச்சாட்டு

புதுடெல்லி: ‘மத்திய பிரதேசத்தில் பணபலம், அதிகாரத்தைக் கொண்டு ஆட்சியைக் கவிழ்க்கும் பாஜ.வின் சதி, ஜனநாயகத்தின் மீதான கறை’ என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் பாஜ இறங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பலமுறை முயற்சி நடந்து அது தோல்வி அடைந்தது. இந்நிலையில், ஆளும் கட்சியைச் சேர்ந்த 8 எம்எல்ஏ.க்கள் கடத்தப்பட்டு, அரியானாவில் உள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டிருப்பதை காங்கிரஸ் வட்டாரங்கள் உறுதிபடுத்தி உள்ளன. இவர்களில் காங்கிரஸ் 4, சுயேச்சை ஒருவர், மீதமுள்ளவர்கள் பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சியை சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சக்திசிங் கூறியதாவது: மபி.யில் எம்எல்ஏ.க்கள் வேட்டையை பாஜ தொடங்கி உள்ளது.

ஜனநாயகத்தில் யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்களே தீர்மானிக்கின்றனர். ஆனால் குஜராத், கர்நாடகா, கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் யார் ஆட்சி அமைத்திருக்கிறார்கள்?. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் மூலம் பாஜ.வின் கஜானாக்களில் கருப்பு பணம் குவிந்துள்ளது. அதனைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைக் கவிழ்க்கின்றனர்.  மோடி, அமித்ஷா ஆகிய இருவரின் உத்தரவுப்படியே மாநில பாஜ தலைவர்கள் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் மபி.யில் நிச்சயமாக வெற்றி பெற மாட்டார்கள். இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உச்சநீதிமன்றம் தண்டனை வழங்கும். அரசியலமைப்பு சட்டத்தின்படி, குதிரை பேரம் நடத்தக் கூடாது. ஆனால் மோடியும், அமித்ஷாவும் அது தங்களுடைய பிறப்புரிமை என்பது போல் அதில் ஈடுபடுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

முதல்வர் மறுப்பு:

செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் முதல்வர் கமல்நாத், ``எம்எல்ஏ.க்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். அது போன்ற ஒன்றும் நடக்கவில்லை. எம்எல்ஏ.க்கள் திரும்பி வந்து விடுவார்கள்’’ என்று கூறினார்.

Related Stories: