உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் தலைவர் இல்லாமலே துணைத்தலைவர் தேர்தல்: சங்கராபுரம் ஊராட்சியில் மீண்டும் குழப்பம்

காரைக்குடி: சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், துணைத்தலைவர் தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது உறுப்பினர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே சாக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட சங்கராபுரம் ஊராட்சி மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக முதலில் தேவி, இரண்டாவதாக பிரியதர்சினி என இரண்டு பேருக்கு சான்று வழங்கப்பட்டது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.

 இந்நிலையில் இந்த ஊராட்சி மன்றத்துக்கான துணைத்தலைவர் தேர்தல் வரும் 4ம் தேதி நடத்தப்பட உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் உறுப்பினர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். துணைத்தலைவர் பதவிக்கு தலைவர் வாக்களிக்க வேண்டும். தலைவர் இல்லாமலே எப்படி துணைத்தலைவர் தேர்தல் நடத்த முடியும் என உறுப்பினர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.

உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், ‘‘துணைத்தலைவர் தேர்தலுக்கு ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் அறிவிப்பு வெளியிட்டனர். அப்போது தலைவர் பதவி வழக்கை காரணம் காட்டி துணைத்தலைவர் தேர்தலை தள்ளிவைத்தனர். தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு உள்ள நிலையில் வரும் 4ம் தேதி தேர்தல் நடத்தப்பட உள்ளதாக மீண்டும் அறிவித்துள்ளனர். தலைவர் வாக்கு இல்லாமலேயே துணைத்தலைவர் தேர்வு செய்யப்படுவாரா வழக்கு முடிந்து தலைவர் பதவியேற்றவுடன் அவர் எப்படி மீண்டும் வாக்களிப்பார் என்பது தெரியவில்லை. தேர்தல் நடத்தும் அலுவலரின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது’’ என்றனர்.

Related Stories: