பருவநிலை மாற்றத்தினால் தனுஷ்கோடி வந்திருக்கும் பிளமிங்கோ வெளிநாட்டு பறவைகள்: பார்வையாளர்கள் கண்டு ரசிப்பு

ராமேஸ்வரம்:  பருவகால மாற்றத்தின்போது மனிதர்கள் இடம்பெயர்ந்து புத்துணர்ச்சி பெறுவதைப்போல பறவைகளும் வலசை வருகின்றன. அதாவது தற்காலிகமாக இடம்பெயர்கின்றன. காலநிலை மாற்றத்தால் பிளமிங்கோ எனப்படும் வெளிநாட்டு நாரை வகை பறவைகள் தற்போது தனுஷ்கோடி பகுதியில் குவிந்துள்ளன. மனிதர்களைப்போல பறவைகளும் வெப்பநிலை மாறுபாட்டின்போது தங்களுக்கு இதமான, ஏதுவான வாழிடங்களுக்கு படையெடுக்கின்றன. பல நாட்கள், பல மாதங்கள் பயணித்து குறிப்பிட்ட இடங்களுக்கு வருடாவருடம் வலசை வருகின்றன. கோடை காலத்தில் குளிர் பிரதேசங்களுக்கும், குளிர் காலத்தில் இதமான தட்பவெட்ப நிலை,  நிலவும் பிரதேசங்களுக்கும் பல்லாயிரம் கிலோமீட்டர் கடந்து வருகின்றன. அந்த வகையில் தமிழகத்தின் தனுஷ்கோடி கடற்கரை பகுதிகளில் பிளமிங்கோ பறவைகள் லட்சக்கணக்கில் குவிந்துள்ளன. இவை பூநாரை அல்லது செந்நாரை என்றழைக்கப்படுகிறது.

பிளமிங்கோ அலகானது நன்கு வளைந்தும், அகலமாகவும், அதன் நுனிப்பகுதியில் கருப்பு நிறத்திலும் காணப்படுகிறது. மேலும்,  நீளமான சிவப்பு கால்களும், செந்நிறத்தில் இறக்கைகளையும் கொண்டுள்ளன. இவை கரையோரத்தில் வாழும் பறவை என்பதால், சேறு, சகதி நிறைத்த பகுதிகளில்தான் இரையை தேடுகின்றன. இந்த பிளமிங்கோக்களில் பல வகைகள்  காணப்படுகின்றன. இவைகள் பெரும்பாலும், ஆப்ரிக்கா, ஐரோப்பா, மற்றும் தென்னமெரிக்கா உள்ளிட்ட பகுதிகளில்தான் வசித்து வருகின்றன. மேலும், பலவகை பிளமிங்கோ பறவைகள் மார்ச் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில்  ராமேஸ்வரம், தனுஷ்கோடி, செங்கல்பட்டு, திருநெல்வேலி, நாகை வேதாரண்யம், மற்றும் கடலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வலசை வருகின்றன. மேலும் தனுஷ் கோடி கடற்கரையில் குவிந்துள்ள இவ்வகை பறவைகளை காண பல்வேறு சுற்றுலா பயணிகளும், மாணவர்களும் வந்த வண்ணம் உள்ளனர். இதனால் அப்பகுதியே உற்சாகத்தில் ஆழ்ந்துள்ளது.

Related Stories: