9.90 லட்சம் பேர் பயனடைவார்கள் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: ரூ.183.86 கோடி ஒதுக்கீடு, முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

* சி, டி பிரிவு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.3,000 வரை கிடைக்கும்

சென்னை: தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் பரிசு தொகை அறிவித்து ரூ.183.86 கோடி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பள்ளிக்கல்வி தொடங்கி உயர்கல்வி வரை, வேளாண் வளர்ச்சி முதல் தொழில்துறை வளர்ச்சி வரை, பள்ளி சிறார்களுக்கு காலை உணவு தொடங்கி, அவர்தம் ஆற்றலையும் அறிவினையும் பெருக்கிட நான் முதல்வன் வரை, மகளிருக்கு உரிமைத்தொகை தொடங்கி, மாணவர்களுக்கு புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் வரை துறைதோறும் பல முன்னோடி திட்டங்களை, எல்லார்க்கும் எல்லாம் என்ற அடிப்படையில் தீட்டிச் செயல்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இத்திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழாவினை எழுச்சியோடு கொண்டாடி மகிழ 2024-25ம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட ரூ.183 கோடி 86 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி சுமார் 9 லட்சத்து 90 ஆயிரம் பேர் பயனடைவார்கள். இந்த உத்தரவின்படி, ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.

தொகுப்பூதியம், சிறப்புகால முறை ஊதியம் பெறும் பணியாளர்கள் மற்றும் 2024-25ம் நிதியாண்டில் குறைந்தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாகப் பணிபுரிந்து சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழுநேர மற்றும் பகுதி நேரப் பணியாளர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும் சி மற்றும் டி பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள், கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு ரூ.1,000 பொங்கல் பரிசாக வழங்கப்படும். இவ்வாறு அரசு அறிவித்துள்ளது.

Related Stories: