வீட்டு வசதி வாரியம் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு

சென்னை: வீட்டு வசதி வாரியம் சார்பாக இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு அரசு வீடு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. இவர், கடந்த 12 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். அந்த வீட்டை தமிழக அரசு அவருக்கு இலவசமாக வழங்கியது. இது என் கொள்கைக்கு எதிரானது என்று கூறி இலவசமாக கொடுத்த வீட்டுக்கு, வாடகை கட்டி வந்தார் நல்லகண்ணு. இந்தநிலையில், 1953ம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மிகவும் பழுதாகி இருந்ததால் அதில் குடியிருந்தவர்கள் காலி செய்யும்படி  தமிழக அரசு கேட்டுக்கொண்டது. இது தொடர்பாக, மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நல்லகண்ணு, அங்கிருந்த மற்ற குடியிருப்பு வாசிகளைப்போல வெளியேறினார். இதையடுத்து, அவர் கே.கே.நகரில் உள்ள வீடு ஒன்றிற்கு குடிபெயர்ந்தார்.

இதுபற்றி கடந்த ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தில், திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த துணை முதல்வர், அரசு சார்பில் நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் வீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அப்போது தொலைபேசி வாயிலாக பேசி நல்லகண்ணுவை தொடர்பு கொண்டு, உங்களுக்கு அரசு வீடு தர தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்தார். இந்த நிலையில் சென்னை நந்தனம் பகுதியில் வீட்டு வசதி வாரியம் சார்பாக நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட் மூத்த  தலைவர் நல்லகண்ணு விரைவில் அரசு ஒதுக்கியுள்ள வீட்டிற்கு குடியேறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: