டெல்லியில் மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம்: காவல் இணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா பேச்சு

புதுடெல்லி: டெல்லியில் மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம், பாதுகாப்பிற்கு நாங்கள் இருக்கிறோம் என காவல் இணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா கூறியுள்ளார். டெல்லியில் வன்முறை பாதித்த பகுதிகளான சாந்த்பாக், ஜாஃப்ராபாத், பஜன்புரா, யமுனாவிஹார், மற்றும் மஜ்பூரில் தொடா்ந்து பதற்றம் நிலவியதை அடுத்து அங்கு பாதுகாப்புப் படையினர், துணை ராணுவத்தினா் இன்று கொடி அணிவகுப்பு நடத்தினர். இதில் சாந்த்பாக் பகுதியில் கொடி அணிவகுப்பில் ஈடுபட்ட டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஓ.பி.மிஷ்ரா, மைக் மூலம் மக்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மளிகை, மருத்துவம் மற்றும் பிற கடைகளை தாராளமாக திறக்கலாம். தேவையான பொருட்கள் வாங்குவதற்கு மக்கள் வெளியே வரலாம். மக்கள் எதற்கும் அச்சப்பட வேண்டாம். தங்களின் பாதுகாப்பிற்காக காவல்துறை உள்ளது. தயவுசெய்து யாரும் குழுக்களாக கூட வேண்டாம். குறிப்பாக, இளஞர்களை இதனை செய்ய வேண்டாம்.

வேலைக்கு செல்பவர்கள் செல்லலாம். தினசரி வாழ்க்கையை மக்கள் தாரளாமாக வாழலாம். யாரும் எதற்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. அவ்வாறு பயம் இருப்பின், அவர்கள் எங்களிடம் வந்து அதனை தெரிவிக்கலாம் என கூறியுள்ளார். முன்னதாக, வடகிழக்கு டெல்லியின் ஜாப்ராபாத், மவுஜ்பூர் உள்ளிட்ட பகுதிகளில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் மறுநாளில் மிகப்பெரும் வன்முறையாக மாறியது. இதில் ஏராளமானோர் படுகாயமடைந்தனர். உயிரிழப்புகளும் நிகழ்ந்தது. இதையடுத்து வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர துணை ராணுவம் அழைக்கப்பட்டது. மேலும் வன்முறை பாதித்த பகுதிகளில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இதனால் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு தொடர்ந்து பதற்றம் நீடித்து வந்தது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன. பல இடங்களில் தெருக்கள் வெறிச்சோடி ஊரடங்கு போன்ற நிலை காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: