மயிலாடும்பாறை அருகே பயன்பாடு இல்லாமல் பாழாகும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்: வீணான அரசின் ரூ.2 கோடி

வருஷநாடு: மயிலாடும்பாறை அருகே, ரூ.2 கோடியில் கட்டப்பட்ட ஒழங்குமுறை விற்பனைக் கூடம் பயன்பாடு இல்லாமல் பாழடைந்து கிடக்கிறது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடும்பாறை அருகே, தங்கம்மாள்புரம் கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனை கூடம் கட்டப்பட்டுள்ளது. இந்த விற்பனை கூடத்தில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது விளை பொருட்களான இலவம்பஞ்சு, கொட்டை முந்திரி ஆகியவற்றை பதப்படுத்தி விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், பதப்படுத்தி விற்பனை செய்யும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தற்போது பயன்பாடின்றி பாழாகி வருகிறது. இதனால், அரசின் நிதி ரூ.2 கோடி வீணடிக்கப்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் கட்டிடம் இடிந்து விழும் நிலை ஏற்படும். இதனால், அரசு நிதி வீணானதாக அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர் இது குறித்து அறிவழகன் என்பவர் கூறுகையில், ‘ரூ.2 கோடியில் கட்டப்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பயன்பாடு இன்றி பாழாக கிடக்கிறது.

இதனால், விவசாயிகள் தங்களது விளை பொருட்களான கொட்டை முந்திரி, இலவம்பஞ்சுகளை தனியார் குடோன்களில் அதிக விலை கொடுத்து பாதுகாத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுக்கு முன்பு அரசு சார்பில் கட்டிக் கொடுக்கப்பட்ட இக்கட்டிடம் பாழடைந்து வருவது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: