600 ஏக்கர் பரப்பளவில் மலர் தோட்டங்கள்; பூக்கள் சாகுபடியில் ‘தோவாளையாக’ மாறும் மானூர் வட்டாரம்: அரசு கொள்முதல் நிலையம் அமைக்குமா?

நெல்லை: பூக்கள் சாகுபடியில் நெல்லை மாவட்டம் மானூர் வட்டாரம் சின்ன தோவாளையாக மாறிவருகிறது. 600 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களில் பல வண்ண பூக்கள் பூத்து குலுங்குகின்றன. எனவே அரசு கொள்முதல் நிலையம் அமைத்து பூ சாகுபடி விவசாயிகளுக்கு கைகொடுக்கவேண்டும் என எதிர்பார்க்கின்றனர். நெல்லை மாவட்டத்தில், நெல், காய்கனிகளுக்கு அடுத்தபடியாக பூ சாகுபடி அதிகரித்து வருகிறது. குறிப்பாக மானூர் மற்றும் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டாரங்களில் ஏராளமான கிராமங்களின் விவசாயிகளின் பிரதான தொழில் பூ விளைச்சல் செய்வதாக உள்ளது.கடந்த வடகிழக்கு பருவமழை சிறப்பாக பெய்ததால் குளங்கள் மட்டுமின்றி கிணறுகளும் நிரம்பி வழிந்தன. இதனால் மானூர்  வட்டாரத்தில் மானூர், அழகியபாண்டியபுரம் உள்ளிட்ட சுற்றுப்புறங்களில் பல பகுதிகளில் விவசாயிகள் பூ உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

தேவையான தண்ணீர் கிடைப்பதால் கடந்த 2 மாதங்களாக இப்பகுதிகளில் ஓசூர் கேந்தி, நாட்டு கேந்தி, கட்டி கேந்தி, வாடாமல்லி, ஆரஞ்சு கேந்தி, வெள்ளை கேந்தி, கோழி கொண்டை, பச்சை, பிச்சிப்பூ, மல்லி போன்ற பூக்களை அதிகளவில் நடவு செய்தனர். இதனால் இவற்றின் விளைச்சல் தற்போது அமோகமாக உள்ளது. மானூர் வட்டாரத்தில் மட்டும் சுமார் 600 ஏக்கர் பரப்பளவில் எங்கு திரும்பினாலும் மலர் தோட்டங்களாக காட்சி அளிக்கின்றன. சிறிய அளவிலான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளும் மலர் சாகுபடி செய்து பலனடைகின்றனர். கேந்திப்பூக்களை பொறுத்தவரை 30 நாட்களில் அறுவடைக்கு தயாராகி விடுகின்றன. 30ம் நாளில் இருந்து அடுத்த 30 நாட்களுக்கு அவர்களால் விதைத்த செடிகளில் இருந்து பூக்களை பெறமுடிகிறது. சிறிய பரப்பளவு நிலத்தில் கூட தினமும் 60 கிலோவிற்கு குறையாமல்  பூ விளைச்சல் கிடைக்கிறது.

இவற்றை நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, ஆலங்குளம், சங்கரன்கோவில் பூ சந்தைகளுக்கு கொண்டு சென்று வழங்குகின்றனர், சில மொத்த வியாபாரிகள் இவர்களிடம் பெறும் பூக்களை குமரி மாவட்டத்திற்கும் ெகாண்டு செல்கின்றனர். பூக்கள் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் இவர்களுக்கு போதிய விலை கிடைப்பதில்லை. இதுகுறித்து இப்பகுதி பூ விவசாயிகள் கூறுகையில், நல்ல மழை பெய்ததால் கடந்த சில மாங்களாக பூ விளைச்சல் நன்றாக உள்ளது. ஆனால் திருவிழா காலங்களில் மட்டுமே அதிகபட்சம் கிலோ ரூ.40 வரையிலான விலையில் வியாபாரிகள் வாங்குகின்றனர். மற்ற காலங்களில் கிலோ ரூ.5 மற்றும் ரூ.10 என்ற விலையில்தான் வியாபாரிகள் வாங்குகின்றனர். பூக்களை பயிரிடவும் வாரத்திற்கு இரண்டு முறை மருந்து அடிப்பது, களை எடுப்பது போன்ற பல்வேறு பணிகளுக்கு ஆகும் செலவுகூட சில நேரங்களில் கிடைப்பதில்லை. குமரி மாவட்டம் தோவாளையில் விளைவது போல் இப்பகுதிகளிலும் பூக்கள் அதிகளவில் விளைகின்றன.

எனவே இந்த விவசாயத்தை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். குறிப்பாக பூ கொள்முதல் நிலையங்களை அரசு இப்பகுதியில் அமைக்க வேண்டும். பூக்கள் பறித்து 24 மணி நேரத்திற்குள் விலை போகாவிட்டால் கெட்டு விடுகின்றன. எனவே இவற்றை பதப்படுத்த குளிர்சாதன அறையுடன் கூடிய நிலையத்தை அரசு அமைப்பதுடன் எல்லா நேரங்களிலும் நியாயமான விலையில் கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். தண்ணீர் இல்லாத காலங்களில் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். விற்பனையாகாத பூக்களை கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யவேண்டும். இதுபோன்ற உதவிக்கரங்களை அரசு நீட்்டினால் மானூர் சுற்றுவட்டார பகுதிகளில் மேலும் பல விவசாயிகள் பூ சாகுபடி செய்வார்கள் என்றனர்.

Related Stories: