கரூர் நகரில் குவியும் குப்பைகள் மேலாண்மை திட்டம் செயல்படுத்துவது எப்போது?... பொதுமக்கள், வியாபாரிகள் எதிர்பார்ப்பு

2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, மக்கள் தொகை 2,14,412 ஆக உள்ளது. நகர பகுதியில் சுமார் 67ஆயிரம் வீடுகள், 14 ஆயிரம் கடைகள், 215தொழிற்சாலைகளில் இருந்து தினமும் குப்பைகள் வெளியேற்றப்படுகின்றன. கடந்த சில மாதங்களாக கரூர் நகர பகுதியெங்கும் குப்பைகள் மலைபோல் குவிந்து கிடக்கிறது. கரூர் நகராட்சியில் சராசரியாக தினமும் 80டன் குப்பைகள், பண்டிகை போன்ற நாட்களில் 100டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. குப்பைகளை அகற்றுகின்ற பணியில் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுமார் 250 பேர், ஒப்பந்த பணியாளர்கள் 400 பேர் என 650 பேர் ஈடுபடுகின்றனர். குப்பைகளை அகற்ற 24 லாரிகள் பயன்படுத்தப்படுகின்றன. சேகரிக்கப்படும் குப்பைகள் கருர் வாங்கல் சாலையில் உள்ள நகராட்சி குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லப்படுகின்றன. நகராட்சி சார்பில் டாடாஏஸ் வாகனங்கள், பேட்டரியில் இயங்கும் பைக்போன்ற வாகனங்கள் 105 வாங்கப்பட்டு மக்கும் குப்பை மக்காத குப்பை என பிரித்து வாங்கப்படுகிறது.

மக்கும் குப்பைகள் அனைத்தும் உரமாக்குவதற்காக 12 இடங்களில் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சலித்து 35 நாட்களுக்குப் பின்னர் உரமாக்கப்படுகிறது. உரமானது விவசாயத்திற்கு வழங்கப்படுகிறது. குப்பையை உரமாக்கும் நுண்ணுயிர்க்கூடம் கரூர் பாலம்மாள்புரம், அரிக்காரம்பாளையம், அருகம்பாளையம், தெற்குகாந்திகிராமம் உள்ளிட்ட 5 இடங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மக்காத குப்பைகள் யாவும் கண்ணாடி, பிளாஸ்டிக் என பலவகையாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வகை மக்காத குப்பைகளை சுகாதார பணியாளர்கள் விற்பனை செய்து தொகையை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. மக்கும் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு சுமார் 40 டன்னுக்கு மேல் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. குப்பைக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. வீடுகளுக்கு வீட்டுவரியின் அடிப்படையில் ரூ.30முதல் ரூ.600வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

டீக்கடைகள் முதல் வணிக வளாகங்கள் வரை இதே அடிப்படையில் குப்பைவரிகள் ரூ.150முதல் ரூ.600வரையும், அதிகபட்சமாக ரூ.1200வரையும் மாத வரியாக வசூலிக்கப்படுகிறது. கட்டட உரிமையாளர்கள் இவ்வரியை செலுத்துகின்றனர். திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் அவர்களுக்குள்ளேயே அமைப்பு ஏற்படுத்திக் கொண்டு குப்பை மேலாண்மை செய்து கொள்ள வேண்டும். குப்பைகள் பொது வெளிக்கு வரக்கூடாது என நகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தனியார் மருத்துவமனைகளை பொருத்தளவில் மருத்துவக்கழிவுகளை பயோ முறையில் தனியார் நிறுவனம் மூலமாக அகற்றி விடுகின்றனர். மக்கும், மக்காத குப்பைகளை நகராட்சி பணியாளர்களிடம் அளிக்கின்றனர். ரூ.300முதல் ரூ.600வரை தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக சுகாதார அலுவலர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுகாதார துறையினர் தூய்மைப்பணி என கூறி குப்பைதொட்டிகளை அகற்றிவிட்டனர். குப்பைகளை தினமும் வண்டிகளில் தரம் பிரித்து அளிக்க கூறுகின்றனர். பணியாளர்கள் பற்றாக்குறையால் அவர்களால் தினமும் வரமுடியவில்லை. 2 அல்லது 3 நாள் குப்பையை வீட்டில் வைக்கும் நிலையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. குப்பை வரி என வசூலித்து விட்டு பணியாளர்கள் பற்றாக்குறை, தொட்டியை அகற்றுகிறோம் என நடவடிக்கையில் இறங்குவது எப்படி சாத்தியமாகும். முழுஅளவில் திட்டத்தை செயல்படுத்தினால் அதாவது தினமும் குப்பைகளை சேகரித்தால் மட்டுமே சாத்தியமாகும். ஆயுதபூஜை, பொங்கல் போன்ற பண்டிகைகளின்போது சிறப்பு ஏற்பாடு செய்வதாக அறிவிப்புதான் வந்தது. அதை செயல்படுத்தவில்லை. நகராட்சி தேர்தலை நடத்தாமல் இருப்பதால் கவுன்சிலர்கள் இல்லாத நிலை உள்ளது. தனி அதிகாரிகள் பொதுமக்கள் புகார்களை கண்டு கொள்வதில்லை.

மேற்பார்வையாளர்கள், ஆய்வாளர்கள் களப்பணிக்கு வருவதில்லை. எதற்கெடுத்தாலும் நகராட்சி அலுவலகத்திற்கே போகும் நிலை உள்ளது. அங்கு போனாலும் பயனில்லை. கவுன்சிலர்கள் செய்யும் வேலையை அலுவலர்களால் செய்ய முடியவில்லை. அரசாலும் நகராட்சி தேர்தலை நடத்த முடியவில்லை. விளைவு டெக்ஸ்சிட்டி குப்பை சிட்டியாக மாறியதுடன் சுகாதார கேட்டிலும் சிக்கி தவிக்கிறது. குப்பை பிரச்சனை இப்படி என்றால் வடிகால் பிரச்சனை பற்றி கேட்கவே வேண்டாம். டெங்கு வந்தால் பணிசெய்வது மற்ற நேரங்களில் கண்டு கொள்ளாமல் போய்விடுவது என்ற நிலை தான் உள்ளது. கவுன்சிலர்கள் இருந்தால் அரசியல் தலையீடு இருக்கும். தனிஅதிகாரிகள் ஆட்சியில் தயவு தாட்சணம் இன்றி நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நிலை மாறிவிட்டது. தேர்தல் நடைபெறாவிட்டாலும் மறைமுகமாக ஆளும்கட்சியினர் தலையீடு அத்தனை துறையிலும் காணப்படுகிறது.

சில ஆண்டுகளாக ஆணையரே இல்லை. பொறுப்பு அதிகாரிதான் செயல்பட்டார். உள்ளாட்சித் தேர்தலையொட்டிதான் ஆணையரே நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர். கரூர் மாவட்ட ஊரகவளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) மாவட்ட செயலாளர் கந்தசாமி கூறுகையில், குப்பை மேலாண்மை திட்டத்தை சரிவர செயல்படுத்துவதில்லை. குப்பைதொட்டிகள் அகற்றப்பட்டதால் தீ வைத்து எரிக்கின்றனர். ஆள்பற்றாக்குறை உள்ளது. 200 நகராட்சி துப்புரவுபணியாளர்களை கண்காணிக்க 15 மேற்பார்வையாளர்கள். 10 ஆய்வாளர்கள் தேவையா?. இவர்களுக்கு மாதம் ரூ.25ஆயிரம், ரூ.50ஆயிரம் குறைந்தபட்சம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் துப்புரவு பணியாளர்களுக்கோ ரூ.300 சம்பளத்தை கூட சரியாக தருவதில்லை. ஒருநாளைக்கு 400 வீடுகளில் சேகரிக்க வேண்டும். 8 மணி நேரத்தில் இதுசாத்தியமா?. பேட்டரி வண்டிகளில் 800 வீடுகளில் சேகரிக்க வேண்டும்.

டாடாஏஸ் வண்டியில் 3 பேர் சென்று 1200 வீடுகளில் சேகரித்து தரம் பிரிக்க வேண்டும்.மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் அலுவலக உதவியாளர்கள் என்ற பெயரில் அரசியல் பின்புலத்தில் வேலை செய்யாமல் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கு டிரான்ஸ்பரும் கிடையாது. மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது. ஆள்பற்றாக்குறை காரணமாகத்தான் குப்பை பிரச்சனை தீர்வில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. 1000 பணியாளர்களை நியமித்தால்தான் நாள்தோறும் குப்பைகளை சேரிக்க முடியும். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் வாங்கப்பட்ட 6 ட்ரம் பின்லாரிகள், அதற்காக வாங்கப்பட்ட 200 ட்ரம் பின் டப்பாக்கள் எங்கே இருக்கிறது என தெரியவில்லை. ரூ.1 கோடியில் வாங்கப்பட்ட காம்பாக்ட் லாரிகள், 200 காம்பாக்ட் டிரம்பின்கள் ஓராண்டு கூட பயன்படுத்தாமல் பழுதடைந்துள்ளது. 2018ல் வாங்கப்பட்ட வாகனங்கள் பயன்படுத்தாத நிலையில் உள்ளது.

இந்த முறைகேடுகளை மூடிமறைக்கவே துப்புரவு பணியாளர்களை இன்னலுக்குஉள்ளாக்குகின்றனர் என்றார். இதுகுறித்து நகராட்சி ஆணையர் சுதா கூறுகையில், 12 உரத்தயாரிப்பு நிலையங்கள் செயல்பட இருக்கின்றன. இவை முழுமையாக செயல்படும்போது 95 சதவீத குப்பை கிடங்கிற்கு கொண்டு செல்லாமல் உரமாகவும், மறுசுழற்சிக்காகவும் மாற்றப்படும். சாலையோரங்களில் குப்பைகளை சேகரிக்கும் தொட்டி இருக்காது. எடுத்து செல்ல வேண்டிய வேலை லாரிகளுக்கும் இருக்காது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என பொதுமக்கள் பிரித்து கொடுக்கவேண்டும். குப்பைகளை பிரித்து கொடுக்க சிரமப்படுவோர் அதனை தரம்பிரிக்கும் பணியாளர்களை நினைத்துப் பார்க்க வேண்டும். தினமும் 10டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகிறது. இவை அரியலூர் சிமெண்டு ஆலைக்குஅனுப்பப்படுகிறது.

250கிமீ தூரம் இவைகளை கொண்டு செல்லும் சிரமத்தை தவிர்க்க கரூரிலேயே அழித்திட நன்கொடையாளர்களை அணுகியுள்ளோம். அரசு காலனியில் சேகரமான குப்பைகள் ரூ.9 கோடியே 33 லட்சம் செலவில் பயோமைனிங் என்ற திட்டத்தில் சுத்திகரித்து உரமாக்கப்பட்டு அந்த இடம் சுத்தமாக்கப்படும் என்றார். கரூர் நகராட்சி 1874ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 1969ல் முதல்நிலை நகராட்சியாக்கப்பட்டது. 1983ல் தேர்வுநிலை, 1988ல் சிறப்புநிலை நகராட்சியாக்கப்பட்டது. 2011ம் ஆண்டு முதல் கரூர் நகராட்சியானது இனாம் கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி இணைக்கப்பட்டது. முதலில் 36 வார்டுகளாக இருந்தது. இணைப்புக்கு பின்னர் 48வார்டுகளாக உயர்த்தப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு புகார்

கரூர் நகராட்சியில் குப்பை மேலாண்மைதிட்டத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து லஞ்சஒழிப்பு போலீசுக்கு தொழிற்சங்கங்கள் சார்பில் புகார் அனுப்பப்பட்டுள்ளது. அதில், குப்பை மேலாண்மை திட்டத்தில் பல கோடி ஊழல் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளனர். கடந்த 2 வருடங்களாக ஆணையர் நியமிக்காமல் பொறியாளரை பொறுப்பு ஆணையராக வைத்துக் கொண்டு நடைபெற்ற தில்லு முல்லுகளை பற்றி குறிப்பிட்டுள்ளனர். 2013, 2014ம் ஆண்டுகளில் வாங்கிய 6ட்ரம் பின்லாரிகள், பழுதுநீக்கம் செய்யப்பட்ட ட்ரம்பின் டப்பாக்கள் பயன்பாட்டில் இல்லை. 2016, 2017ம் ஆண்டுகளில் ரூ.1கோடி மதிப்பில் வாங்கப்பட்ட 2காம்பாக்ட் லாரிகள், ரூ.20ஆயிரம் மதிப்புள்ள 200காம்ப்பாக்ட் ட்ரம் பின்கள் ஒரு ஆண்டிலேயே பழுதாகியுள்ளது. 2018ம் ஆண்டில் பழுதுநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்ட டம்பர்பின்களும் பயன்பாட்டில் இல்லை. இந்த முறைகேடுகள் குறித்து லஞ்சஒழிப்புத்துறை போலீசுக்கு தொழிற்சங்கத்தினர் புகார் அனுப்பியுள்ளனர்.

Related Stories: