மாநகராட்சி அலட்சிய போக்கால் கோவையில் பெருக்கெடுக்கும் நாய்கள்: அஞ்சி நடுங்கும் பள்ளி மாணவ-மாணவிகள்

கோவை: கோவை மாநகரில் மாநகராட்சியின் அலட்சிய போக்கால் தெருநாய்கள் பெருக்கெடுக்கின்றன. இவை, உயிர்க்குடிக்க துடிப்பதால் தெருவில் நடமாட பள்ளி மாணவ-மாணவிகள் அஞ்சி நடுங்குகின்றனர். கோவை மாநகராட்சியின் கீழ் 100 வார்டுகள் உள்ளன. இதில், கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, சென்ட்ரல் என ஐந்து மண்டலங்களிலும் தெருநாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. இவை, தெருவில் ஆங்காங்கே சுற்றித்திரிவதுடன், சிறுவர்-சிறுமியர் ரோட்டில் நடந்து செல்லும்போது அவர்களை திடீெரன பதம் பார்த்து விடுகின்றன. இவற்றை பிடித்து அழிக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் திணறுகின்றனர். காரணம், புளு கிராஸ் அமைப்பின் மூலமாக, மிருக வதை தடுப்பு சட்டம் தடுக்கிறது. இருப்பினும், இவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டு, அதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்காக, சீரநாயக்கன்பாளையம் மற்றும் உக்கடம் கழிவுநீர் பண்ணை செல்லும் சாலை ஆகிய இரு இடங்களில், மாநகராட்சி சார்பில் ‘’தெருநாய் கருத்தடை மையம்’’ அமைக்கப்பட்டது. ‘அனிமல் பர்த் கன்ட்ரோல் செண்டர்’ என  பெயரிடப்பட்டு, ‘பிப்பிள் பார் அனிமல்’ என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்துடன்  மாநகராட்சி நிர்வாகம் இணைந்து இம்மையத்தை அமைத்தது. மாநகராட்சி சுகாதார பிரிவு ஊழியர்கள் பெண் நாய்களை வலைபோட்டு பிடித்து, இங்கு கொண்டுவந்து கருத்தடை ஆபரேஷன் செய்து, மீண்டும் விடுவிப்பது வழக்கமாக இருந்தது. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு இப்பணி படு விரைவாக நடந்தது. அதன்பிறகு, இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. தெருநாய்கள் தாமாக வந்து, இம்மையத்தில் பகல், இரவு நேரங்களில் தூங்கும் அளவுக்கு இந்த கருத்தடை மையங்கள் முடங்கிப்போயின.  

அதனால், கோவை மாநகரில் தெருநாய்களின் எண்ணிக்கை மீண்டும் பல மடங்கு அதிகரிக்க துவங்கியுள்ளது. இவற்றின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. தெருநாய்களிடம் ‘கடி’படுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. குறிப்பாக, பள்ளி மாணவ-மாணவிகள் தெருவில் நடக்க முடியாத நிலை உள்ளது. தங்களது வீடுகளுக்கு முன்பும், வீதியிலும் விளையாடவும் முடியவில்லை. அந்த அளவுக்கு தெருநாய்கள் துரத்தி, துரத்தி கடிக்கும் நிலை நகரில் தொடர்கிறது. இவற்றை அடக்க முடியாமல் மாநகராட்சி அதிகாரிகள் தவிப்பதால், தெருநாய்களை கண்டு, பள்ளி மாணவ-மாணவிகள் அஞ்சி நடுங்கும் நிலை உள்ளது. குறிப்பாக, கோவை ரத்தினபுரி, சிவானந்தா காலனி, ஆர்.எஸ்.புரம், மேட்டுப்பாளையம் சாலை, குறிச்சி, குனியமுத்தூர், போத்தனூர், கோவைப்புதூர், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், கணபதி, கவுண்டம்பாளையம் பகுதியில் தெருநாய்களின் அட்டகாசம் மிக அதிகமாக உள்ளது.

இவை, திடீரென ஒன்றுக்கொண்டு சண்டையிட்டுக்கொண்டு, அங்குமிங்கும் ஓடி, இருசக்கர வாகனங்களில் செல்வோரை கீழே விழ வைத்துவிடுகிறது. பலர் படுகாயம் அடைவது வாடிக்கையாகி விட்டது. பள்ளி மாணவர்களைப்போல், இருசக்கர வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடர்கிறது. இவை, சாலைகளில் குறுக்கும், நெடுக்குமாக  ஓடுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களுடைய உயிரை கையில் பிடித்துக்கொண்டு  பயணிக்க வேண்டியுள்ளது. இரவு நேரங்களில், இவை, முக்கிய சந்திப்புகளில் கூட்டம், கூட்டமாக படுத்துக்கொண்டு அந்த வழியாக யார் சென்றாலும் துரத்துகின்றன. குறிப்பாக, நள்ளிரவில் பஸ், ஆட்டோ கிடைக்காமல் நடந்துசெல்வோரின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ளது. இவற்றை, முற்றிலுமாக ஒழிக்கவேண்டும் என்பதே கோவை மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டால் நல்லது.

தெருநாய்களின் அட்டகாசம் குறித்து, கோவையை சேர்ந்த சமூக நல ஆர்வலர் நியூட்டன் கூறுகையில், ‘’நான், தினமும் பைக்கில் கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு வேலைக்கு சென்று, வருகிறேன். இரவு 8 மணிக்கு மேல் வீடு திரும்புவது வழக்கம். போத்தனூர், ஈஸ்வர் நகர், வடிவுநகர் ஆகிய பகுதிகளில் உள்ள தெருநாய்கள் சாலைகளில் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இதனால் பலர் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்படுகிறது. நகரில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து, மீண்டும் கருத்தடை செய்ய வேண்டும். இந்த நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் துரிதப்படுத்தி, கோவை மக்களை தெருநாய்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும்’’ என்றார். தமிழக மேற்கு மண்டல விலங்குகள் நல அதிகாரி கல்பனா வாசுதேவன் கூறியதாவது: ‘பிப்பிள் பார் அனிமல்’ அமைப்புடன் இணைந்து கோவை மாநகராட்சி நிர்வாகம் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யும் மையத்தை அமைத்தது.

கடந்த 2014ம் ஆண்டு துவங்கி 2017ம் ஆண்டு வரை சுமார் 20 ஆயிரம் தெருநாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்யப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு காரணங்களினால் இந்த கருத்தடை மையம் மூடப்பட்டது. அதனால், தெருநாய்கள் பெருக்கம் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளன. குறிப்பாக, 2017ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாநகரில் 6 ஆயிரம் தெருநாய்களுக்கு மட்டுமே கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், இது தற்போது 20 ஆயிரமாக அதிகரித்துவிட்டது. தற்போது மாநகராட்சி நிர்வாகம், ஒண்டிப்புதூர் பகுதியில் மேலும் ஒரு கருத்தடை மையம் கட்டுகிறது. இப்பணி முடிந்தபிறகு, மாநகரில் உள்ள அனைத்து கருத்தடை மையங்களும் மீண்டும் வழக்கம்போல் செயல்பட துவங்கும். இவ்வாறு கல்பனா வாசுதேவன் கூறினார்.

கோவை மாநகராட்சி சுகாதார பிரிவு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ஒண்டிப்புதூரில் மாநகராட்சி நிர்வாகம் சார்பாக அனிமல் பர்த் சென்டர் கட்டப்பட்டு வருகிறது. இதில் தெருநாய்களுக்கு கருத்தடை செய்யப்படும். இதன் பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும். அதன்பின் தெருநாய்கள் தொல்லை மாநகரில் குறைய துவங்கிவிடும்’’ என்றார்.

* ஒரே ஆண்டில் 33,958 பேருக்கு கடி..!

தெருநாய்களிடம் ‘கடி’படுவோருக்கு சிகிச்சை அளிக்க, கோவை அரசு மருத்துவமனையில் தனிப்பிரிவு உள்ளது. இங்கு, நாய்கடிக்கு பிரத்யேக விஷமுறிவு ஊசி போடப்படுகிறது. உரிய சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இங்கு, கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை 33,958 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். சிகிச்சை பலனின்றி மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.  

 

* ஏழு ஆண்டில் 46 பேர் உயிரிழப்பு..!

கோவை மாவட்டம் முழுவதும் கடந்த 2012ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டு வரை தெருநாய் கடி காரணமாக 2 லட்சத்து 77 ஆயிரத்து 630 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். மேலும், 46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

Related Stories: