திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்கள் வசதிக்காக ரூ28 கோடியில் கட்டப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ வீணாகுது: தனியார் லாட்ஜ்களில் கட்டண கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் கிரிவல பக்தர்களின் வசதிக்காக ரூ28 கோடியில் கட்டப்பட்ட ‘யாத்ரி நிவாஸ்’ வீணாகி வருகிறது. இதனால் தனியார் லாட்ஜ்களில் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. ‘‘உருவமும் உயிருமாகி ஓதிய உலகுக் கெல்லாம், பெருவினை பிறப்பு வீடாய் நின்ற எம்பெருமான் மிக்க அருவிபொன் சொரியும் அண்ணா மலையுளாய்’’ என உள்ளமும், உயிரும் கசிந்துருகி, அருந்தமிழில் திருநாவுக்கரசர் வணங்கிய அருள்நகரம் திருவண்ணாமலை. சைவ திருத்தலங்களின் நடுநாயகமாக திகழும் அக்னி திருத்தலம். எண்ணற்ற மகான்களை தன்னகத்தே ஈர்த்த முக்தித் திருநகரம். இங்கு, லிங்க வடிவாக எழுந்தருளிய சோணகிரி எனும் அண்ணாமலையை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று நலம் பெறுகின்றனர்.

பஞ்ச பூத தலங்கள் ஐந்து. முக்தி தரும் ஸ்தலங்கள் நான்கு. திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தை தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி. உண்ணாமுலையம்மன் உடனாகிய அண்ணாமலை அருள்தரும் திருவண்ணாமலையோ நினைக்க முக்தித்தரும். அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக, உமையாளுக்கு இடபாகம் அருளிய அர்த்தநாரீஸ்வரராக, இறைவன் திருவிளையாடல் நிகழ்த்திய பெருமை திருவண்ணாமலைக்கு உண்டு. அதனால்தான், உலகெங்கும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையை தரிசிக்க விரும்புகின்றனர். மாதந்தோறும் முழுமதி நிறைநாளில் (பவுர்ணமி) சுமார் 5 லட்சம் பக்தர்கள் இங்கு கிரிவலம் செல்கின்றனர். சித்ரா பவுர்ணமி, கார்த்திகை தீபத்திருவிழா போன்ற விஷேச நாட்களில், 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம் சென்று வழிபடுகின்றனர். அதோடு, ஒவ்வொரு நாளும் அண்ணாமலையார் திருக்கோயிலை தரிசிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

இத்தனை பெருமையும், சிறப்பும் மிக்க திருவண்ணாமலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நிறைவேற்றப்படாதது ேவதனைக்குரியதாக உள்ளது. பக்தர்களுக்கான போக்குவரத்து வசதி, தங்குமிடம், உணவு, சுகாதாரம், கழிப்பறைகள், குளியலறைகள் போன்ற வசதிகள் கேள்விக்குறியாக உள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் திருவண்ணாமலையில், திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தங்கும் விடுதிகள் இல்லை. அதனால், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் லாட்ஜ்களில், பக்தர்கள் தங்க வேண்டிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, பவுர்ணமி, தீபத்திருவிழா போன்ற விசேஷ நாட்களில் தனியார் லாட்ஜ்களில் நடைபெறும் கட்டண கொள்ளையால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இரண்டு மடங்கு, மூன்று மடங்கு வாடகை செலுத்தினாலும், விழா காலங்களில் தங்குவதற்கு லாட்ஜ்களில் அறைகள் கிடைப்பதில்லை. எனவே, 14 கிமீ தூரம் நடந்து கிரிவலம் முடித்த சோர்வுடன், மீண்டும் நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் நிலைக்கு பக்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, திருவண்ணாமலையில் குறைந்த கட்டணத்தில் பக்தர்கள் தங்குவதற்கான தங்கும் அறைகளை கோயில் நிர்வாகம் கட்டித்தர வேண்டும் என்று பக்தர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்தது. அதன் காரணமாக, தமிழ்நாடு சுற்றுலாத்துறை மற்றும் பண்பாடு அரசாணை எண் 211 மூலம், திருவண்ணாமலையில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி (யாத்ரி நிவாஸ்) கட்டுவதற்கான அறிவிப்பு கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அன்று தமிழக சட்டமன்றத்தில் வெளியிடப்பட்டது.

ஆனால், அதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் நிலம் கையகப்படுத்துதல் போன்றவற்றில் தாமதம் ஏற்பட்டது.  பின்னர், இந்துசமய அறநிலையத்துறை சார்பில், ரூ28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. மேலும், கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்கம் அருகே நகராட்சி குப்பைக் கிடங்கையொட்டி, ‘யாத்ரி நிவாஸ்’ கட்டுமான பணி, கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. இந்த கட்டிடத்தை, கழுகுப் பார்வையில் பார்க்கும் போது (ஏரியல் வியூ) லிங்க வடிவமைப்பில் இருப்பதை போல கட்டுமான பணிகள் அமைந்தது குறிப்பிடத்தக்கது. யாத்ரி நிவாஸ் கட்டுமான பணியை, 17 மாதங்களில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்தது. ஆனால், கட்டி முடித்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், இதுவரை ‘யாத்ரி நிவாஸ்’ திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சட்டமன்ற மதிப்பீட்டுக்குழு இந்த கட்டிடத்தை நேரில் ஆய்வு செய்தது.

அப்போது, பணிகளை முடித்து, பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்தது. அதன்பிறகும், எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. விசாலமான பரப்பளவில் அமைந்துள்ள யாத்ரி நிவாஸ் கட்டிடத்தில், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தங்கும் அறைகள் (காட்டேஜ்), தனி நபர் தங்கும் அறைகள், துயிற்கூடம் என்று 3 தொகுப்புகளாக, 3 அடுக்கு கொண்ட கட்டிடமாக 87 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. மேலும், கடைகளுடன் கூடிய சிற்றுண்டி உணவகம், ஓட்டுநர்கள் ஓய்வு அறை, பொதுக்கழிப்பிடம், சலவையகம் ஆகியவை தனி கட்டிடமாக 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கிறது. மேலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், புல்வெளி அமைப்பு, சுற்றுச்சுவர், அணுகுசாலை ஆகிய வசதிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த கட்டிடத்தில், 24 காட்டேஜ்கள், 63 தனிநபர் தங்கும் அறைகள், 36 அகன்ற அறைகள் இடம் பெற்றுள்ளன. காட்டேஜ்களில் 96 நபர்களும், தனி அறைகளில் 124 நபர்களும், அகன்ற அறைகளில் 210 நபர்களும் என, ஒரே நேரத்தில் 430 நபர்கள் தங்கும் வசதி உள்ளது. இத்தனை கட்டமைப்பு வசதிகள் இருந்தாலும், இந்த கட்டிடம் அமைந்த பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கு பெரும் சவாலாக மாறியிருக்கிறது. சுற்றுச்சூழல் சீர்கேடு நிறைந்த குப்பைக் கிடங்கையொட்டி, யாத்ரி நிவாஸ் அமைந்திருப்பது, இங்கு தங்கும் பக்தர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இந்த கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர தடையாக இருக்கும் முக்கிய காரணங்களில் குப்பைக் கிடங்கு குறிப்பிடத்தக்கது.

யாத்ரி நிவாஸ் கட்டுமான பணி முடிவதற்குள், குப்பைக் கிடங்கு அகற்றப்படும் என்று அரசு தரப்பும், மாவட்ட நிர்வாகமும் உறுதியளித்தது.

மேலும், யாத்ரி நிவாஸ் கட்டிடத்துக்கு அருகே ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைவதால், வெளியூர் பக்தர்கள் தங்குவதற்கு யாத்ரி நிவாஸ் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். ஆனால், குப்பைக் கிடங்கும் இங்கிருந்து அகற்றப்படவில்லை. புதிய பஸ் நிலைய கட்டுமான பணியும் தொடங்கவில்லை. யாத்ரி நிவாஸ் கட்டிடமும் திறக்கவில்லை. ₹28 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடம், யாருக்கும் பயன்படாமல் பாழாகி வருகிறது. யாத்ரி நிவாஸ் பயன்பாட்டுக்கு வந்தால், குறைந்த கட்டணத்தில் தங்கும் அறைகள் வாடகைக்கு கிடைக்கும். குடும்பத்தினருடன் தொலைதூரங்களில் இருந்து வரும் பக்தர்கள், இங்கு தங்கியிருந்து கிரிவலம் செல்லவும், சுவாமி தரிசனம் செய்யவும் வாய்ப்பு கிடைக்கும். பவுர்ணமி கிரிவலம் முடிந்ததும் பஸ், ரயில் ஆகியவற்றில் கூட்ட நெரிசலில் சிக்கி பயணிப்பதை தவிர்த்து, யாத்ரி நிவாஸ் அறைகளில் தங்கியிருந்து, கூட்டம் குறைந்த பிறகு சொந்த ஊர் திரும்பலாம்.

எனவே, ஈசான்யம் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்கை உடனடியாக அங்கிருந்து அகற்றி, யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகவும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

பயன்படாமல் பாழாவதாக பக்தர்கள் வேதனை

திருவண்ணாமலைக்கு மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்லும் பக்தர்கள் கூறியதாவது: திருவண்ணாமலையில் உள்ள லாட்ஜ்களில் பவுர்ணமி நாட்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கின்றனர். எனவே, சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த வௌியூர் பக்தர்கள், இங்கு அறை எடுத்து தங்க முடிவதில்லை. கோயில் நிர்வாகம் சார்பில் கட்டியுள்ள ‘யாத்ரி நிவாஸ்’ திறந்தால், குறைந்த கட்டணத்தில் குடும்பத்துடன் தங்க முடியும். மேலும், கிரிவலப்பாதையில் அமைந்திருப்பதால், வந்துசெல்வதும் எளிது. ஆனாலும், அந்த கட்டிடத்தையொட்டி சுகாதார சீர்கேடு நிறைந்திருக்கிறது. எனவே, அங்குள்ள குப்பைக் கிடங்குகளை அகற்றினால்தான் யாத்ரி நிவாசில் தங்க முடியும். எனவே, கட்டி முடித்தும் பயன்படாமல் பாழாகி வரும் யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை, திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதோடு, குறைவான அறை வாடகையை நிர்ணயிக்க வேண்டும் என்றனர்.

விரைவில் திறக்க நடவடிக்கை மாவட்ட சுற்றுலா அலுவலர்

திருவண்ணாமலை மாவட்ட சுற்றுலா அலுவலர்(பொறுப்பு) உமாசங்கர் கூறியதாவது: திருவண்ணாமலையில், யாத்ரி நிவாஸ் கட்டுவதற்கான அரசாணை சுற்றுலாத்துறை மற்றும் பண்பாடு சார்பில் வெளியிடப்பட்டது. ஆனால், அதற்கான நிதி இந்து சமய அறநிலையத்துறை மூலம் ஒதுக்கப்பட்டது. எனவே, யாத்ரி நிவாஸ் கட்டிடத்தை திறப்பது குறித்து அறநிலையத்துறைதான் முடிவு செய்யும். ‘யாத்ரி நிவாஸ்’ திறந்ததும், அதனை நேரடியாக கோயில் நிர்வாகம் பராமரிக்குமா? அல்லது சுற்றுலாத்துறையிடம் ஒப்படைத்து பராமரிக்க உத்தரவிடப்படுமா? என்பது தெரியவில்லை. அரசின் உத்தரவு வெளியான பிறகுதான் இது குறித்து எங்களுக்கு தெரியவரும். இவ்வாறு அவர் கூறினார். மேலும், அண்ணாமலையார் கோயில் நிர்வாகம் தரப்பில் இது குறித்து விசாரித்தபோது, யாத்ரி நிவாஸ் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது, விரைவில் திறக்கப்பட்டு பக்தர்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்’ என்றனர்.

Related Stories: