முறைகேடாக 1,100 போலீசார் நியமனம் நாகலாந்து துணை முதல்வரிடம் விசாரணை நடத்த உத்தரவு: லோக் ஆயுக்தா அதிரடி

கொஹிமா; நாகலாந்தில் விதிமுறைகளை மீறி 1,100 போலீஸ்காரர்களை நியமித்த விவகாரத்தில் துணை முதல்வர் பட்டூனிடம் ஆரம்ப கட்ட விசாரணை நடத்த லோக் ஆயுக்தா உத்தரவிட்டுள்ளது.  முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் ஊழல் செய்தால் அவர்களிடம் விசாரணை நடத்தும் வகையில் லோக் ஆயுக்தா அமைப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், நாகலாந்து துணைமுதல்வராக உள்ள ஒய்.பட்டூன், விதிமுறைகளை மீறி 1,100 போலீசாரை நியமித்ததாக விக்கா. ஏ.ஆய் என்பவர் புகார் தெரிவித்துள்ளார். இந்த புகாரை தானாக முன்வந்து லோக் ஆயுக்தா அமைப்பு விசாரணைக்கு ஏற்றுள்ளது. ஆய் அளித்துள்ள புகார் மனுவில், ‘நாகலாந்தில் துணை முதல்வராகவும் உள்துறை அமைச்சராகவும் உள்ள ஒய்.பட்டூன், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி 1135 போலீஸ் பணியிடங்களை நிரப்பியுள்ளார். இந்த பதவிகளுக்கு விளம்பரம் எதுவும் செய்யாமல் விதிமுறைகளை மீறி துணை முதல்வர் நியமனம் செய்துள்ளார். இந்த பதவிக்கு எழுத்து தேர்வில் தகுதி பெற்றவர்கள் துணை முதல்வரை அணுகியபோது அவர்களை தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து நேர்காணலுக்கு தகுதி பெறவைத்துள்ளார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்று  கூறப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இந்த வழக்கை விசாரித்த லோக் ஆயுக்தா நீதிபதி உமாநாத் சிங் பிறப்பித்த உத்தரவில், ‘விதிமுறைகளை மீறி 1,135 போலீஸ்காரர்களை நியமித்த நாகலாந்து துணை முதல்வர் பட்டூனிடம் முதல்வர் ஆரம்ப கட்ட விசாரணை நடத்தலாம். இதையடுத்து, முதல்வர் நெய்பியோ நியோ துணை முதல்வர் பட்டூனிடம் நடத்திய வாக்குமூலத்தை விசாரணை அறிக்கையாக அடுத்த விசாரணைக்கு முன் தாக்கல் செய்ய வேண்டும். இதேபோல், துணை முதல்வர் பட்டூனும் வாக்குமூலத்தை தனது பதில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.  மனுதாரருக்கு நாகலாந்து போலீசார் தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும்,’ என்று கூறியுள்ளார்.

*  துணை முதல்வர் பட்டூன், 2013-18ல் நாகா மக்கள் கட்சியின் ஆட்சிக் காலத்தில் உள்துறை  அமைச்சராக இருந்தார்.  

* பின்னர், அந்த கட்சியில் இருந்து விலகி பாஜ,வில் சேர்ந்தார்.

*  2018ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தற்போது மீண்டும் துணை முதல்வராக இருக்கிறார்.

Related Stories: