தென் பெண்ணை ஆறு விவகாரத்தில் புதிய நடுவர்மன்றம் அமைப்பது தொடர்பாக மத்திய அரசின் சமரச குழு ஆலோசனைக்கு பிறகு விவாதிக்கலாம் : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : தென் பெண்ணை ஆற்றுநீர் பங்கீடு மற்றும் யர்கோல் பகுதியில் கர்நாடகா அணை கட்டுவதை தடுக்கக் கோரி, தமிழக அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் 4 வாரம் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

தென் பெண்ணையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் தற்போது மத்திய அரசு உருவாக்கியுள்ள சமரச குழு எடுக்கும் ஆலோசனைக்கு பிறகு, புதிய நடுவர் மன்றம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கலாம் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?

தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் யு.யு.லலித் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்  பெண்ணையாறு விவகாரத்தில் இருமாநில நீர் பங்கீடு பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு தரப்பில் சமரச குழு ஒன்று தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. அது வரும் 24ம் தேதி கூடி ஆலோசனை நடத்த உள்ளது. அதனால் வழக்கை இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கலாம், என தெரிவித்தார். இதையடுத்து கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், இந்த விவகாரத்தில் சமரச குழு எடுக்கும் முடிவிற்கு என்ன என்பதை தெரிந்து கொண்டு, புதிய நடுவர்மன்றம் அமைப்பது தொடர்பாக விவாதிக்கலாம் என தெரிவித்து வழக்கை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

வழக்கின் பின்னணி

கர்நாடக மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள நந்திமலையில் தென்பெண்ணை ஆறு உற்பத்தி ஆகிறது. சிக்கபள்ளாப்பூர், கோலார், பெங்களூரு ஆகிய மாவட்டங்களை கடந்து தமிழகத்தில் நுழையும் தென்பெண்ணை கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களை கடந்து வங்கக் கடலில் கலக்கிறது. 432 கி.மீ. நீளமுள்ள இந்த ஆறு கர்நாடகாவில் 110 கி.மீ. தூரமும் தமிழகத்தில் 322 கி.மீ. தூரமும் பாய்கிறது.இந்நிலையில் கடந்த 2012-ல் பெங்களூரு ஊரகம், கோலார் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக தென்பெண்ணை ஆற்றின் முக்கிய துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே அணைக் கட்டும் பணியில் க‌ர்நாடக அரசு இறங்கியது. இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த நவம்பரில் தள்ளுபடி செய்தது.

தமிழக அரசு புதிய மனு தாக்கல்

இந்நிலையில் தென்பெண்ணை நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு புதிய மனு தாக்கல் செய்தது. அதில், ‘‘தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகா 50 மீட்டர் உயரத்தில் பெரிய அணையாக கட்டுவதால், ஆற்றின் நீர்ப்போக்கு மாறும் நிலை ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆறு தமிழகத்தில் 80 சதவீதம் பாய்வதால் கர்நாடகா இதில் முழு உரிமை கோர முடியாது.ஏற்கெனவே கர்நாடகா - தமிழகம் இடையே தென்பெண்ணை நதிநீர் பங்கீட்டில் சிக்கல் நீடிக்கும் நிலையில், தற்போது கட்டப்படும் அணையால் இந்த சிக்கல் மேலும் அதிகரிக்கும். மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர் பங்கீட்டை தீர்க்க நீர் தாவா சட்டத்தின் கீழ் தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.தீர்ப்பாயம் அமைக்கப்படும் வரை தென்பெண்ணை ஆற்றில் அணைக் கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியது.

 கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரம்

இதற்கு கர்நாடக அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தான் அணை கட்டப்படுகிறது. தமிழகத்துடன் நேரடியாக பாயும் தென்பெண்ணை ஆற்றில் இந்த அணை கட்டப்படவில்லை. கடந்த 2013-ம் ஆண்டு ரூ. 240 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுமானப் பணி தொடங்கி, தற்போது 80 சதவீத பணி நிறைவடைந்துள்ளது. இந்நிலையில் இந்த திட்டத்தை கைவிடுவது மிகவும் கடினம்.இந்த அணையால் கர்நாடகாவில் 45 கிராம மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். தற்போது இந்த திட்டத்தை கைவிட்டால் பொருளாதார அளவிலான நஷ்டமும், 45 கிராம மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரியது.

Related Stories: