டெல்லி முதல்வராக பதவியேற்ற நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லி முதலமைச்சராக மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை இன்று சந்தித்தார். 70 தொகுதிகளை டெல்லி சட்டசபைக்கான தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது. அதை எதிர்த்து போட்டியிட்ட பாஜக 8 இடங்களை மட்டுமே கைப்பற்றி தோல்வியடைந்தது. காங்கிரஸ் எந்த தொகுதிகளிலும் வெற்றிபெறவில்லை. தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக டெல்லி முதல்அமைச்சர் பதவியை ஏற்றார். அவருடன் இணைந்து சக எம்.எல்.ஏ.க்களும் தங்கள் பதவிகளை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில், முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் இன்று உள்துறை மந்திரி அமித்ஷாவை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு எனவும் இதில் அரசியல் தொடர்பான விவாதங்கள் எதுவும் நடைபெறவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி தேர்தலில் பாஜக சார்பில் அமித்ஷாவும் ஆம் ஆத்மி சார்பில் அரவிந்த் கெஜ்ரிவாலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: