ஏலச்சீட்டு நடத்தி 1 கோடி மோசடி : பெண் கைது

அண்ணாநகர்: ஏலச்சீட்டு நடத்தி 1 கோடி மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். கோயம்பேடு வள்ளியம்மை தெருவை சேர்ந்தவர் விஜயலட்சுமி (38). தீபாவளி சீட்டு, மாதாந்திர ஏலச்சீட்டு, நகை சீட்டு என பல சீட்டுகளை நடத்தி வருகிறார். இவரிடம், 200க்கும் மேற்பட்டோர் சீட்டு கட்டி வருகின்றனர். இந்நிலையில், கடந்த தீபாவளி பண்டிகையின்போது, முதிர்வு காலம் முடிந்ததும், பணத்தை கேட்க 100க்கும் மேற்பட்டோர், விஜயலட்சுமி வீட்டுக்கு சென்றனர். ஆனால், அவரது வீடு பூட்டி இருந்ததால் அதிர்ச்சியடைந்தனர். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது, விஜயலட்சுமி, அவரது கணவருடன் தலைமறைவானது தெரிந்தது. பாதிக்கப்பட்டவர்கள் இதுகுறித்து கோயம்பேடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விஜயலட்சுமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், விஜயலட்சுமி கோயம்பேட்டில் பதுங்கி இருப்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே 100க்கும் மேற்பட்டோர், விரைந்து சென்று, விஜயலட்சுமி வீட்டை சுற்றி வளைத்தனர். வீட்டுக்குள் இருந்த விஜயலட்சுமியை மடக்கி பிடித்து, கோயம்பேடு போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் தீபக்குமார், விஜயலட்சுமியை கைது செய்தார். விசாரணையில், இவர் பலரிடம் சீட்டு நடத்தி 1 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: