தமிழுக்கு வெறும் 23 கோடி சமஸ்கிருதத்துக்கு 643 கோடி செலவு: மத்திய அரசு ஓரவஞ்சனை

புதுடெல்லி: தமிழ், மலையாளம் உள்ளிட்ட 5 தொன்மையான மொழிகளின் வளர்ச்சிக்கு ரூ.29 கோடி மட்டுமே செலவழித்துள்ள மத்திய அரசு, சமஸ்கிருதத்திற்கு மட்டும் 22 மடங்கு அதிகமாக 643 கோடியை செலவழித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சமீபகாலமாக பிரதமர் மோடியும் அவரது அமைச்சரவை சகாக்களும் தமிழ்மொழியை பெருமையாக பேசி வருகின்றனர். பிரதமரின் ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி முதல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் வரை திருக்குறளும், பாரதியின் கவிதைகளும் ஓங்கி ஒலிக்கப்படுகிறது. ஆனால், தமிழைப் பற்றி உயர்வாக பேசினாலும், அந்த மொழியின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எதையுமே செய்வதில்லை; வழக்கற்று போன சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்காகத்தான் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி வருகிறது என நாடாளுமன்றத்தில் கடந்த 10ம் தேதி பட்ஜெட் மீதான விவாதத்தின்போது மத்திய சென்னை தொகுதி திமுக எம்பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டி இருந்தார்.அதை தற்போது மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. நாடாளுமன்றத்தில் சிவசேனா எம்பி ஒருவர் கேட்ட கேள்விக்கு மத்திய கலாசார துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. அதில், ‘‘சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்காக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் டெல்லியில் நிறுவப்பட்ட ராஷ்டிரிய சான்ஸ்கிரிட் சன்ஸ்தான் அமைப்புக்காக கடந்த 3 ஆண்டில் ₹643.84 கோடி செலவிடப்பட்டுள்ளது. 2019-20ம் நிதியாண்டில் 231.15 கோடியும், 2018-19ல் 214.38 கோடியும், 2017-18ல் 198.31 கோடியும் செலவிடப்பட்டுள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

அதே சமயம், மற்ற 5 செம்மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா மொழிகளின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டி உள்ளது. 5 மொழிகளுக்கும் சேர்த்துமொத்தமே 29 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதை விட சமஸ்கிருதத்திற்கு செலவிடப்பட்டது 22 மடங்கு அதிகமாகும்.சமஸ்கிருதத்திற்கு அதிக நிதி ஒதுக்கியதால் தமிழகத்தில் சென்னையில் உள்ள செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிதி படிப்படியாக கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. 2017-18ல் ₹10.59 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2018-19ல் ₹4.65 கோடியும், 2019-20ல் 7.7 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. கன்னடம், தெலுங்கு மொழிகளின் வளர்ச்சிக்கு 2017-18ல் வெறும் தலா 1 கோடியும், 2018-19ல் 99 லட்சமும், 2019-20ல் 1.07 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மலையாளம், ஒடியாவுக்கு ஒரு பைசா கூட செலவிடப்படவில்லை. அம்மொழிகளுக்கு ஆய்வு மையமும் கிடையாது. மலையாளம், ஒடியா மொழிகளுக்கு செம்மொழி ஆய்வு மையம் அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவ்வாறு, சமஸ்கிருதத்தை வளர்க்க பாடுபடும் மத்திய அரசு மற்ற செம்மொழிகளை பாகுபாட்டோடு நடத்துவதை மொழி ஆர்வலர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். சமூக வலைதளங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Related Stories: