வாழ்நாள் முழுவதும் மரங்கள் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பை அறிய விரும்புகிறோம் : திட்டத்திற்காக மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

டெல்லி : மரங்கள் அதன் வாழ்நாள் முழுவதும் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பை அறிவியல் பூர்வமாக அறிய விரும்புவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 4கிமீ நீளத்திற்கு நடை மேம்பாலம் அமைக்க அம்மாநில அரசு முடிவு செய்த நிலையில், இத்திட்டத்திற்காக ஏராளமான மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக ஜனநாயக உரிமைகள் அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மரங்களை வெட்டாமல் மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள குழு 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதே வேளையில், மரங்கள் அதன் வாழ்நாள் முழுவதும் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பை அறிவியல் பூர்வமாக அறிய விரும்புவதாகவும் சுற்றுசுழல் அறிஞர்களையும் பொருளாதார நிபுணர்களையும் இதில் ஈடுபடுத்த விரும்புகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். மரங்கள் வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பை அறிந்த பிறகு அதை மையமாக வைத்து ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்காக மரங்கள் வெட்டப்பட வேண்டுமா என்பதை முடிவு செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

Related Stories: