சொத்துக்களை முடக்கும் நடவடிக்கையை எதிர்த்து விஜய் மல்லையா தாக்கல் செய்த மனு மீதான விசாரணை: உச்சநீதிமன்றம் ஒத்திவைப்பு

புதுடெல்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, சில வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் பாக்கி வைத்துள்ளார். அதை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பியோடி விட்டார். இந்தியா விடுத்த வேண்டுகோளின் பேரில், கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போது இருந்து அவர் ஜாமீனில் உள்ளார். இந்தியா தொடர்ந்த வழக்கில் அவரை நாடு கடத்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்கு இங்கிலாந்து உள்துறை அமைச்சர் சஜித் ஜாவீத் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தார். நாடு கடத்தும் உத்தரவை எதிர்த்து லண்டன் ராயல் நீதிமன்றத்தில் விஜய் மல்லையா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு லண்டனில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, தலைமறைவு பொருளாதார குற்றவாளியாக அறிவித்து சொத்துகளை முடக்கும் அமலாக்கத் துறை நடவடிக்கைக்கு தடைகோரி தொழிலதிபர் விஜய் மல்லையா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை இன்று பரிசீலித்த உச்சநீதிமன்றம், ஹோலி பண்டிகைக்கு பிறகு மார்ச் மாதத்துக்கு விசாரணையை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து முன்னதாக லண்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்கிகள் அளித்த புகாரின்பேரில் அமலாக்கத் துறை எனது சொத்துகளை முடக்கியது. சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு நான் எந்த குற்றத்தையும் செய்யவில்லை. வங்கிகளுக்கு நான் தர வேண்டிய பணத்தை தர தயாராக இருக்கிறேன். ஆனால், அமலாக்கத்துறை எனது சொத்துகள்தான் வேண்டும் என்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக காரணமே இல்லாமல் அமலாக்கத்துறையும், சிபிஐயும் என்னை தொந்தரவு செய்து வருகின்றன என்று தெரிவித்திருந்தார். மேலும், வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன்களை ஈடுசெய்ய, தனது சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துகொள்ளலாம் என விஜய் மல்லையா அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது ​குறிப்பிடத்தக்‍கது.

Related Stories: