பெண்ணை மறுமணம் செய்வதாக கூறி 32 சவரன், ரொக்கம், செல்போன் அபேஸ்: போலி சுங்க அதிகாரி கைது

திருவொற்றியூர்:  விவாகரத்து பெற்ற பெண்ணை மறுமணம் செய்து கொள்வதாக கூறி 32 சவரன் நகைகள், ₹27 ஆயிரம், செல்போன், டெபிட் கார்டு ஆகியவற்றை அபேஸ் செய்த போலி கஸ்டம்ஸ் அதிகாரியை போலீசார் கைது செய்தனர். மாதவரம், கே.கே.ஆர் நகர், முதல் தெருவில் வசிப்பவர்  புவனேஸ்வரி (31). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த டேனியல் என்பவருக்கும் கடந்த 2007ம் ஆண்டு திருமணமானது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில்,  கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2015ம் ஆண்டு டேனியலும், புவனேஸ்வரியும் விவாகரத்து பெற்று, பிரிந்து விட்டனர். அதன்பின்னர் புவனேஸ்வரி தனது தாய்  லட்சுமி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். கடந்த அக்டோபர் மாதம் லட்சுமி தனது மகள் புவனேஸ்வரிக்கு மறுமணம் செய்ய தனியார் திருமண தகவல் மையத்தில் பதிவு செய்து இருந்தார். இதை பார்த்து, ரமேஷ் (32) என்பவர், லட்சுமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நான் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறேன். உங்கள் மகள் புவனேஸ்வரியை மறுமணம் செய்துகொள்ள விரும்புகிறேன், என  கூறியுள்ளார்.தொடர்ந்து, கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதி மாதவரம் கே.கே.நகரில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்து, அவரை பெண் பார்த்து திருமணம் செய்ய சம்மதம் தெரிவித்துவிட்டு சென்றுள்ளார். பின்னர் ஓரிரு முறை புவனேஸ்வரியுடன் செல்போனில் பேசிய ரமேஷ், அக்டோபர் 29ம் தேதி திடீரென கே.கே.நகரில் உள்ள புவனேஸ்வரியின் வீட்டிற்கு வந்துள்ளார். வருங்கால மாப்பிள்ளை தானே என்று புவனேஸ்வரியும், அவரது தாய் லட்சுமியும் ரமேஷுக்கு உணவு  கொடுத்து உபசரித்தனர்.

பின்னர், அங்கு ஓய்வெடுத்த ரமேஷ், மாலையில் புறப்பட்டு சென்றுவிட்டார். அவர் சென்ற சிறிது நேரத்தில் புவனேஸ்வரி தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 32 சவரன் நகை, ₹27 ஆயிரம்  மற்றும் விலை உயர்ந்த செல்போன், ஏடிஎம் கார்டு ஆகியவை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார்.இதுபற்றி லட்சுமி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அப்போது  தன் வீட்டிற்கு ரமேஷ் வந்து சென்ற விவரத்தை கூறினார். போலீசார் புகாரை பெற்று, ரமேசுக்கு போன் செய்தனர். ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் தலைமறைவாக இருந்த ரமேசை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் திருநின்றவூர் கொசவன் பாளையத்தில் உள்ள தந்தை வீட்டில் ரமேஷ் பதுங்கி இருப்பதாக மாதவரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் அதிரடியாக சென்று ரமேஷை  சுற்றி வளைத்து பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

அவரிடம்  நடத்திய விசாரணையில் ரமேஷ் ஏற்கனவே ஜெய என்ற பெண்ணை திருமணம் செய்து அவருக்கு இரண்டு குழந்தைகள்  உள்ளனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு, குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி பெரிய நிறுவனங்களில் வேலை வாங்கித் தருகிறேன் என்று கூறி ஒரு சிலரிடம்  பல ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார். இதையடுத்து, திருமண தகவல் மையங்களில் பதிவு செய்துள்ள வசதியான விதவை மற்றும் விவாகரத்து பெற்ற பெண்களை  ஏமாற்றி திருமணம் செய்து கொள்வது போல் நடித்து ஏமாற்றலாம் என்று முடிவு செய்து  ரமேஷ் திருமண தகவல் மையத்தின் மூலம் புவனேஸ்வரியை தேர்வு செய்து தான் ஒரு கஸ்டம்ஸ் அதிகாரி போல் நடித்து நகை, பணத்ைத அபஸே் செய்துள்ளார், என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவர் மூலக்கடையில் தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த 21 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ரமேஷை மாதவரம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: