ஜமியா வீடியோ லீக்கான விவகாரம் காங்கிரஸ் கட்சி எப்போதும் தேசதுரோகிகளுடன் நிற்கிறது : பாஜ செய்தி தொடர்பாளர் பதிலடி

புதுடெல்லி: ஜமியா மிலியா இஸ்லாமியா பல்கலையில் நடந்த வன்முறைக்கு காங்கிரஸ் கட்சி “அரசியல் சாயம்” பூசுவதாக கூறி பாஜ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கடந்த டிசம்பர் 15 ம் தேதி நடந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் பல்லைக்குள் போலீசார் புகுந்து அங்கிருந்த மாணவர்களை தாக்கினர். இதனை டெல்லி போலீசார் மறுத்து வந்த நிலையில், ஜமியா பல்கலையின் நூலகத்திற்குள் புகுந்து அங்கு படித்துக்கொண்டிருந்த மாணவர்கள் மீது  துணை ராணுவப்படை வீரர்கள் மற்றும் டெல்லி போலீசார் தாக்கும் அதிர்ச்சி வீடியோ நேற்று முன்தினம் வெளியானது.

மாணவர்களை தாக்கியதற்கு காங்கிரசின் பொதுச்செலயர் பிரியங்கா காந்தி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், ஜமியா பல்கலை வீடியோ விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் விமர்சனத்துக்கு பாஜ தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. பாஜவின்  செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்மராவ் இதுபற்றி கூறியதாவது: காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சமூக விரோத சக்திகளையும். வன்முறையில் ஈடுபடுவோருக்கும் ஆதரவளிக்கிறது. நாட்டின் பாதுகாப்புப் படையினருக்கும் காவல்துறையினருக்கும் எதிராக குரல் எழுப்புகிறது.  படிக்கும் மாணவர்கள் சிலர் முகத்தை மறைத்துக்கொண்டு கையில் கற்களை ஏந்தி நிற்கின்றனர். மாணவர்கள் ஏன் முகத்தை மூடிக்கொண்டிருக்க வேண்டும்? படிக்கும் மாணவர்கள் கைகளில் கற்கள் வைத்துக்கொள்ள எந்த கல்வி ஒழுக்கத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளது?. காங்கிரஸ் கட்சி எப்போதுமே நாட்டிற்கு விரோதமானவர்களுடன் நிற்கவும், அவர்கள் மூலம் தூண்டவும் செய்கிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: