கிரிக்கெட் சூதாட்ட தரகர் சஞ்சீவ் சாவ்லாவுக்கு 12 நாள் போலீஸ் காவல்: இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்தி அழைத்து வரப்பட்டார்

புதுடெல்லி: இங்கிலாந்தில் குடியேறிய கிரிக்கெட் சூதாட்டத் தரகர் சஞ்சய் சாவ்லா, அங்கிருந்து நேற்று இந்தியாவுக்கு நாடு கடத்தி அழைத்து வரப்பட்டார்.  தென்னாப்பிரிக்க அணி கேப்டன் ஹன்சி குரோஞ்ச் தலைமையில் கடந்த 2000ம் ஆண்டில் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடியபோது சூதாட்டம் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சீவ் சாவ்லா கிரிக்கெட் சூதாட்டக்காரராக செயல்பட்டது தெரியவந்தது.இதனைத் தொடர்ந்து, சஞ்சீவ் சாவ்லா லண்டனுக்கு தப்பியோடி விட்டார். அங்கு அவர் குடியுரிமை பெற்றார். அவரை நாடு கடத்தும்படி மத்திய அரசு, இங்கிலாந்து அரசுக்கு கடந்த 2016ல் கோரிக்கை விடுத்தது.  இது தொடர்பான வழக்கை கடந்த 23ம் தேதி விசாரித்த இங்கிலாந்து நீதிமன்றம், அவரை 28 நாட்களுக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதன் அடிப்படையில், முதலில் அவரை ஸ்காட்லாந்து யார்டு போலீசார் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைப்பதாக கூறப்பட்டது.

இந்நிலையில், சாவ்லா இங்கிலாந்தில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து நேற்று டெல்லி கொண்டு வரப்பட்டார். அங்கிருந்து டெல்லி போலீசார் பாதுகாப்பில் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு மருத்துவப் பரிசோதனைகள் முடிந்த பின்னர், கூடுதல் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில் நீதிபதி சுதிர்குமார் முன்னிலையில் போலீசார் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது அவரை 15 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க, போலீசார் தரப்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், 12 நாள் சஞ்சீவ் சாவ்லாவை காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்தார்.  இதையடுத்து போலீசார் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

Related Stories: