லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீச்சு: வழக்கறிஞர்கள் காயம்..மேலும் 3 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதால் பதற்றம்

லக்னோ: லக்னோ நீதிமன்ற வளாகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் வழக்கறிஞர்கள் காயமடைந்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் பகுதியில் உள்ள நீதிமன்ற வளாகத்தில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் 3 வழக்கறிஞர்கள் காயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு போலீசார் விரைந்தனர். அப்பகுதியில் இருந்து வெடிக்காத 3 நாட்டு வெடிகுண்டுகளை கைப்பற்றினர். வெடிகுண்டு வீசப்பட்ட பகுதியில் ஏராளமான வழக்கறிஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இரண்டு வழக்கறிஞர்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக வெடிகுண்டு வீசப்பட்டிருக்கலாம் என தெரிகிறது. லக்னோ பார் அசோசியேசன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதி, தன்னை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், எனது அறைக்கு வெளியே சுமார் 10 பேர் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். அதில் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் மற்ற இரண்டு வழக்கறிஞர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள், வீசியதில் ஒரு குண்டு மட்டுமே வெடித்தது. மற்றறை வெடிக்கவில்லை, என கூறியுள்ளார். மேலும், நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பையும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார். இந்த நிலையில், குண்டு வீச்சுக்கு மற்றொரு வழக்கறிஞரான ஜீத்து யாதவ் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, ஒரு சில நீதித்துறை அதிகாரிகள் குறித்து லக்னோ பார் அசோசியேசன் இணை செயலாளர் சஞ்சீவ் லோதி, புகார் அளித்ததிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: