உமர் அப்துல்லா சகோதரியின் வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்

புதுடெல்லி: காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்தான கவுடர் விசாரணையில் இருந்து திடீரென விலகியதால் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மெகபூபா உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இதில் ஒரு சிலர் மட்டுமே தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டு காவலில் உள்ள முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, உமர் அப்துல்லாவின் தங்கை சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி எ.வி.ரமணா, நீதிபதிகள் சந்தானகவுடர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி சந்தான கவுடர், இந்த வழக்கில் இருந்து தாம் விலகுவதாக தெரிவித்தார். ஆனால் அதற்கான காரணத்தை அவர் கூறவில்லை.

Related Stories: